‘என்னை துணை முதலமைச்சராக்கு தாயே!’ – துர்க்கைக்கு கடிதம் எழுதிய கர்நாடக அமைச்சர்

பெங்களூரு: கர்நாடகாவில் தற்போது சுகாதாரத்துறை அமைச்சராக இருக்கும் ஸ்ரீராமுலு, தான் விரைவில் துணை முதல்வராக ஆக்கப்பட வேண்டுமென கடவுள் துர்க்கைக்கு கடிதம் எழுதியுள்ள சம்பவம் அம்மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக அரசியலில், பாரதீய ஜனதா கட்சியில் துணை முதல்வர்கள் பிரச்சினை இன்னும் ஓய்ந்த பாடில்லை. இந்நிலையில், ஸ்ரீராமுலுவும் தன் பங்கிற்கு கங்கை ஊதிவிட்டு நெருப்பாக்கி விட்டுள்ளார்.

கர்நாடகத்தின் கலபுராகியில் நடைபெற்ற கல்யாண கர்நாடகா உத்சவ நிகழ்ச்சியில் கலந்துகொள்ளச் சென்றார் ஸ்ரீராமுலு. நிஜாமின் ஆட்சியிலிருந்து ஐதராபாத் சமஸ்தானம் விடுதலை பெற்றதையொட்டி, இந்த விழா அனுசரிக்கப்படுகிறது.

இதற்காக, கலபுராகி செல்லும் முன்னதாக, யாத்கிரி என்ற இடத்தில் தரையிறங்கிய ஸ்ரீராமுலு, ஷாஹாபூர் தாலுகாவில் அமைந்த கோனல் கிராமத்திலுள்ள துர்கா கோயிலுக்குச் சென்று பூஜை நடத்தினார்.

பின்னர், தான் எழுதிய கடிதத்தை, துர்கையின் காலடியில் வைத்து ஆசி வாங்கினார்.

அவரால் கையெழுத்திடப்பட்டு, 2 வரிகளை உள்ளடக்கிய அக்கடிதத்தில், ‘நான் கூடியவிரைவில் துணை முதல்வர் ஆக வேண்டும். அந்த ஆசை கட்டாயம் நிறைவேற்றப்பட வேண்டும்’ என்று எழுதியிருந்தது.

இக்கடிதம்தான், கர்நாடக அரசியலில் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.