பெங்களூரு: கர்நாடக மாநில அமைச்சரவை பிப்ரவரி 6ம் தேதி விரிவுபடுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார் அம்மாநில பாரதீய ஜனதா முதல்வர் எடியூரப்பா.

காங்கிரஸ் – மதசார்பற்ற ஜனதாதளம் ஆட்சியைக் கவிழ்த்த பாரதீய ஜனதா, அங்கு எடியூரப்பா தலைமையில் ஆட்சியமைத்தது. காங்கிரஸ் & தேவகெளடா கட்சியைச் சேர்ந்த சில சட்டமன்ற உறுப்பினர்களை வளைத்து, ஆட்சியைக் க‍ைப்பற்றியது பாரதீய ஜனதா.

கட்சி மாறி வந்த பலருக்கு, அமைச்சர் பதவி தருவதாக ஏற்கனவே உறுதியளிக்கப்பட்டது. அதன்படி, தங்கள் பதவியை ராஜினாமா செய்த அவர்களில் பலர், சட்டமன்ற தேர்தலில் மீண்டும் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளனர்.

எனவே, அவர்களுக்கு அமைச்சர் பதவி அளித்தாக வேண்டிய நிலை எடியூரப்பாவுக்கு ஏற்பட்டுள்ளது. எனவே, தனது அமைச்சரவை விரைவில் விரிவாக்கம் செய்யப்படவுள்ளது என்று எடியூரப்பா அறிவித்துள்ளார்.

தனது அமைச்சரவையில் ஏற்கனவே 18 பேர் உள்ளதாகவும், தற்போதைய விரிவாக்கத்தில் மேலும் 13 பேருக்கு கூடுதலாக வாய்ப்பு வழங்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். அதில் கட்சி மாறி வந்தவர்களின் எண்ணிக்கை 10 என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.