பெங்களூரு

ர்நாடக மாநில கூட்டணி அரசைக் காப்பாற்ற முதல்வரை மாற்றுவதாகக் கூறிய யோசனையை ஏற்க அதிருப்தி உறுப்பினர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

கர்நாடக மாநிலத்தில் மஜத மற்றும் காங்கிரஸ் கட்சியின் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.   இந்த கூட்டணி அரசில் இருந்து 16 சட்டப்பேரவை உறுப்பினர்கள் ராஜினாமா கடிதம் அளித்துள்ளனர்.  இதில் 13 பேர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் மற்றும் 3 பேர் மஜத கட்சியை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.   இதனால்  ஆட்சிக்குப் பெரும்பான்மை குறைந்துள்ளது.

அதிருப்தி உறுப்பினர்கள் தங்கள் ராஜினாமாவை ஏற்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.   கர்நாடக சபாநாயகர் இன்னும் முடிவு எடுக்காமல் இருக்கிறார்.   அதிருப்தி உறுப்பினர்களை சமாதானம் செய்ய காங்கிரஸ் கட்சியினர் கடும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.   ஆனால் உறுப்பினர்கள் பிடிவாதமாகவே இருந்து வருகின்றனர்.

கூட்டணி முதல்வர் குமாரசாமி அத்து மீறி செயல்படுவதாகவும் அரசில் அவரும் அவருடைய சகோதரர் பொதுப்பணித்துறை அமைச்சர் ரேவண்ணாவும் நைத்து முடிவுகளையும் எடுப்பதால் உறுப்பினர்கள் அதிருப்தி அடைந்துள்ளதாகக் கூறி உள்ளனர்.   இதை ஒட்டி நேற்று காங்கிரஸ் மற்றும் மஜத கட்சி தலைவர்கள் கூடி ஆலோசனை நடத்தினார்கள்.

ஆலோசனை முடிவில் அமைச்சர் டி கே சிவகுமார், “தற்போது அரசு கவிழாமல் காப்பாற்ற மஜத தனது முதல்வர் பதவியை தியாகம் செய்ய முன் வந்துள்ளது.   அத்துடன் காங்கிரஸ் கட்சியினர் நான், சித்தராமையா, பரமேஸ்வரா உள்ளிட்ட யாரையும் முதல்வராக தேர்வு செய்ய காங்கிரசுக்கு உரிமை அளித்துள்ளது. “ என செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

ஆனால் அதிருப்தி உறுப்பினர்கள் சார்பில் மும்பையில் இருந்து வெளியிட்டுள்ள வீடியோவில், “எங்களது சுயமரியாதை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது   முன்னாள் முதல்வரான சித்தராமையாவே முதல்வராக தேர்வு செய்யப்பட்டாலும் எங்கள் ராஜினாமா முடிவில் இருந்து மாறப்போவது இல்லை” என உறுப்பினர் பைரதி பசவராஜ் தெரிவித்துள்ளார்.   அவர் சித்தராமையாவின் தீவிர ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

அத்துடன் இந்த அதிருப்தி உறுப்பினர்கள் தங்களை துப்பாக்கி முனையில் பிடித்து வைத்திருப்பதாக அமைச்சர் சிவகுமார் கூறியதை மறுத்துள்ளனர்.  அவர்கள், “மற்ற காங்கிரஸ் உறுப்பினர்கள் சொல்வதைப் போல எங்களை யாரும் பிடித்து வைக்கவிலை.  சுதந்திரமாக நடமாடி வருகிறோம்.  எங்கள் சொந்த விருப்பத்தின் பேரில் இங்கு தங்கி இருக்கிறோம்.   நாங்கள் கடவுள் அருளால் நல்ல வசதியுடன் இருக்கிறோம்.  பணத்துக்காக அணி மாறவில்லை.” என தெரிவித்துள்ளனர்.