பெங்களூரு:

ர்நாடக மாநிலத்தில் ஆளும் கூட்டணி அரசுக்கு எதிராக 13 எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கி உள்ள நிலையில், அவர்கள் மீது கட்சித்தாவல் தடை சட்டப்படி நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் மற்றும் ஜேடிஎஸ் கட்சி தலைவர்கள் முடிவு எடுத்துள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி வருகின்றன.

கர்நாடகத்தில் முதல்வர் குமாரசாமி தலைமையில் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு ஆட்சி அமைக்கப்பட்டதில் இருந்தே, அவ்வப்போது பிரச்சினைகள் எழுவதும், அதிருப்தியாளர்களுக்கு பதவிகள் கொடுத்து சமாதானப் படுத்துவதும்  தொடர்ந்து வருகிறது.

இந்த நிலையில், சமீபத்தில் காங்கிரஸ் மற்றும் ஜேடிஎஸ் கட்சிகளை சேர்ந்த 16 எம்.எல்.ஏ.க்கள் அரசுக்கு எதிராக தங்கள் பதவியை ராஜினாமா செய்வதாக சபாநாயகரிடம் கடிதம் அளித்துள்ளனர். ஆனால், அவர்கள் கடிதம் மீது உடடினயாக முடிவு எடுக்க முடியாது என சபாநாயகர் அறிவித்துள்ள நிலையில், உச்சநீதி மன்றமும், சபாநாயகர் முடிவில் தலையிட முடியாது என்று கைவிரித்து விட்டது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், நாளை மறுதினம் சட்டமன்றத்தில் குமாரசாமி அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. இதற்கிடையில், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அனைவரும் யஷ்வந்தபுரம் அருகே உள்ள நட்சத்திர ஓட்டலில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அவர்களுடன்  முன்னாள் முதல்வர், சித்தராமையா, தினேஷ் குண்டுராவ், துணை முதல்-மந்திரி பரமேஸ்வர், டி.கே.சிவக்குமார், மேலிட பொறுப்பாளர் வேணுகோபால் ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.

இந்த கூட்டத்தை. ஏற்கனவே ராஜினாமா செய்துள்ள 13 எம்.எல்.ஏ.க்கள் உள்பட 16 பேர் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர். மேலும், மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு திரும்புவதாக தெரிவித்த ராமலிங்கரெட்டியின் மகள் சவுமியா ரெட்டியும் கூட்டத்திற்கு வந்திருந்தார். அப்போது, அரசு மீது சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் போது அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். கட்சி விரோத செயல்களில் யாரும் ஈடுபடக்கூடாது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

மேலும், இதுபோன்று கட்சிக்கு எதிராக இனிமேல் எந்தவொரு எம்எல்ஏவும் அணி மாறக்கூடாது என்ற நோக்கில், அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய  முடிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் மீது கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பது குறித்து கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதன் காரணமாக, நாளை மறுதினம் அரசுமீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுவதற்கு முன்பாகவே, அதிருப்தி எம்எல்ஏக்கள் அனைவரும் சபாநாயகரால், தகுதி நீக்கம் செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக கர்நாடகாவில் அரசியலில் மேலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.