நிமிடத்துக்கு நிமிடம் மாறும் கர்நாடக அரசியல் நிலவரம்! சுயேச்சை எம்எல்ஏ நாகேஷ் கடத்தப்பட்டதாக தகவல்

பெங்களூரு:

ர்நாடக மாநிலத்தில் அரசியல் நிலவரம் நிமிடத்துக்கு நிமிடம் மாறி வருகிறது. ஏற்கனவே காங்கிரஸ் அமைச்சர்கள் அனைவரும் தங்களது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில், இன்று காலை அமைச்சரும், சுயேச்சை எம்எல்ஏவுமான நாகேஷ்-சும் தனது பதவியை ராஜினாமா செய்து கடிதம் கொடுத்திருந்தார்.

இந்த நிலையில்,  சுயேச்சை எம்எல்ஏ நாகேஷ் எடியூரப்பா உதவியாளரால் கடத்தப்பட்டுள்ளார் என்றும், அவரை மீட்க, தான்  விமான நிலையம் சென்று பார்ப்பதற்குள் விமானம் கிளம்பி விட்டதாக என்று அமைச்சர் சிவகுமார் தெரிவித்து உள்ளார்.

கர்நாடக காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சிக்கு ஆதரவு தெரிவித்து வந்த நிலையில், அமைச்சர் பதவி கேட்டு ஆட்சிக்கு , குடைச்சல் கொடுத்து வந்தவர் சுயேச்சை எம்எல்ஏ நாகேஷ். இதையடுத்து கடந்த மாதம் (ஜூன்) 14ந்தேதி அவருக்கு அமைச்சர் பதவி  வழங்கினார் முதல்வர் குமாரசாமி. இதன் காரணமாக அவர் அமைதியான நிலையில் இருந்து வந்தார்.

இந்த நிலையில், தற்போது காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்கள் ஆட்சிக்கு எதிராக பொங்கியுள்ள நிலையில், இவரும் தனது பங்குக்கு இன்று காலை கவர்னர் வஜுபாய் வாலாவை சந்தித்து, தனது அமைச்சர் பதவி ராஜினாமா கடிதத்தை வழங்கினார். மேலும் ஆட்சிக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறுவதாக மற்றொரு கடிதத்தையும் சமர்ப்பித்தார்.

இது கர்நாடக அரசியலில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி வந்த நிலையில்,  பெங்களூரில் உள்ள ஹெச்ஏஎல் என்ற பகுதியில் உள்ள ஏர்போர்ட்டில் இருந்து தனியார் விமானத்தின் மூலம் மும்பைக்கு சென்றார்.

இதன் காரணமாக,  நாகேஷ் எம்எல்ஏ, எடியூரப்பாவின் உதவியாளரால் கடத்தப்பட்டு உள்ளார் என்று மாநில அமைச்சர் சிவகுமார் குற்றம் சாட்டி உள்ளார்.  எடியூரப்பாவின் உதவியாளர் சந்தோஷ் என்பவர் அவருடன் இருந்தது, புகைப்பட ஆதாரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது என்றும்,  கர்நாடக அரசியல் குழப்பத்தின் பின்னணியில் பாஜக இருந்து வருவதாகவும் அமைச்சர்  டி கே சிவகுமார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இதுகுறித்து, நாகேஷ் எனக்கு தொலைபேசியில் அழைப்பு விடுத்தார் என்று கூறியவர், தன்னை எடியூரப்பாவின் உதவியாளர் கடத்திச் செல்வதாகவும் கூறினார். உடனே,  நான் பதறி அடித்து ஏர்போர்ட்டுக்கு ஓடினேன். ஆனால், அதற்குள்ளாக விமானம் கிளம்பி விட்டது என்று தெரிவித்தார்.

கர்நாடக அரசியலில் நிமிடத்துக்கு நிமிடம் மாற்றங்கள் நிகழ்ந்து வருவதும் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.