டில்லி:

ர்நாடகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் காரணமாக கடந்த 20 நாட்களுக்கும் மேலாக உயர்த்தப்படாமல் இருந்த பெட்ரோல் டீசல் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளது.

நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் விலை தினசரி மாறுபட்டு வருகிறது. பெட்ரோல் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேச சந்தை விலைக்கு ஏற்ப நாள்தோறும் அறிவித்து வந்தன. இந்நிலையில், கர்நாடக சட்டமன்ற தேர்தல் காரணமாக கடந்த 20 நாட்களுக்கும் மேலாக பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தாமல் மத்திய அரசு தவிர்த்து வந்தது.

பெட்ரோல் டீசல் விலை உயர்வு மாநில தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற பயம் காரணமாக விலை உயர்வு தவிர்க்கப்பட்டு வந்தது,

இந்நிலையில், கர்நாடக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 12ந்தேதி (சனிக்கிழமை) முடிவடைந்ததை தொடர்ந்து இன்று (14) பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்த்தி உள்ளது.

ஏற்கனவே பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு  77 ரூபாய் 43காசுகளாக இருந்தது, தற்போது 18காசுகள் உயர்த்தப்பட்டு 77ரூபாய் 61காசுகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதுபோல டீசல் விலை லிட்டர் ஒன்றுக்கு  69 ரூபாய் 56காசுகளாக இருந்தது தற்போது  23காசுகள் உயர்த்தப்பட்டு 69 ரூபாய் 79காசுகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா, ஈரான் அணுசக்தி உடன்பாடு முறிந்துள்ளதால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை உயரும் நிலை உருவாகி உள்ளதால், இந்தியாவிலும் அதன் தாக்கம் இருக்கும் என்றும், பெட்ரோல், டீசல் விலை மேலும் உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.