பெங்களூரு:

தலித் வீட்டில் சாப்பிடுவதை தவிர்த்து ஓட்டலில் இருந்து உணவு வரவழைத்து சாப்பிட்டதாக எடியூரப்பா மீது குற்றம்சாட்டு எழுந்துள்ளது.

கர்நாடக பாஜ துமகுரு மாவட்டம் குப்பி தாலுகாவில் உள்ள ஒரு தலித் வீட்டிற்கு பாஜ மாநில தலைவர் எடியூரப்பா மற்றும் சில பாஜ தலைவர்கள் சென்றனர். அங்கு அவருக்கு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஆனால், அவர் அந்த உணவை சாப்பிடாமல் ஓட்டலில் இருந்து உணவை வரவழைத்து சாப்பிட்டுள்ளார். தீண்டாமை காரணமாக எடியூரப்பா இவ்வாறு செயல்பட்டதாக மாண்டியாவை சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் போலீசிலும், உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா ஆகியோரிடம் புகார் அளித்துள்ளார்.

இந்த குற்றச்சாட்டை பாஜ மறுத்துள்ளது. காலை உணவாக அந்த தலித் வீட்டில் தலைவர்களுக்கு வழங்க புலாவ் உணவு தயார் செய்யப்பட்டிருந்தது. ஆனால், எடியூரப்பா ஓட்டலில் இருந்து இட்லி, வடை வரவழைத்து சாப்பிட்டுள்ளார்.

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முதல்வர் சித்தாராமையா, மதசார்பற்ற ஜனதா தள தலைவர் குமாராசாமி ஆகியோர் எடியூரப்பாவிற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

‘‘எனது கட்சியும் நானும் சமூக சமத்துவம் கொண்டவர்கள் என்ற தகவலை கூறுவதற்காக தலித் வீட்டில் காலை உணவு சாப்பிட்டேன். ஆனால், நான் ஓட்டலில் இருந்து உணவு வாங்கி வந்து சாப்பிட்டதாக விமர்சனம் செய்கிறார்கள். இதற்கு நான் என்ன செய்ய முடியும்’’ என்று எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

இந்த குற்றச்சாட்டு அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக கூறப்படுகிறது என்று பாஜ தெரிவித்துள்ளது.