பெங்களூரு: பள்ளிகள் திறப்பது குறித்து பெற்றோர்களிடம் கருத்துகளை கேட்க கர்நாடகா அரசு முடிவு செய்துள்ளது.

கொரோனா பாதிப்பால் சிக்கி தவிக்கும் கர்நாடகாவில் பள்ளிகளை மீண்டும் திறக்க உத்தேச அட்டவணையை அம்மாநில அரசு வகுத்துள்ளது. அதன்படி 4ம் வகுப்பு முதல் 7ம் வகுப்பு ஜூலை 1 முதல் நடைபெறும். 8 முதல் 10ம் வகுப்புகளுக்கு  ஜூலை 15 முதல் வகுப்புகளம் ஆரம்பமாகும்.

வகுப்புகள் 1 முதல் 3 வரை ஜூலை 15, நர்சரி மற்றும் முன் முதன்மை வகுப்புகள் ஜூலை 20 முதல் மீண்டும் தொடங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. எஸ்.எஸ்.எல்.சி தேர்வுகள் மற்றும் தேர்வுத்தாள் மதிப்பீடு காரணமாக 11, 12ம் வகுப்புகள் தாமதமாகும் என்று கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. எஸ்எஸ்எல்சி தேர்வுகள் ஜூன் 25 முதல் ஜூலை 4 வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளன.

இந்த அட்டவணைகள் அனைத்தும் அரசின் முன்மொழிவுகளே ஆகும். ஆகையால், அனைத்து பள்ளிகளும், அதிகாரிகளும் பெற்றோரிடம் கால அட்டவணையை ஏற்றுக்கொள்கிறார்களா என்று கருத்து கேட்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

அவர்கள் ஏற்றுக் கொள்ளாவிட்டால் என்ன மாதிரியான பரிந்துரைகள் உள்ளன என்பது பற்றி அதிகாரிகள் தரப்பில் கேட்கப்படும். ஜூன் 5 முதல் அனைத்து ஊழியர்களும் பணிக்கு வரவேண்டும் என்று பள்ளி முதல்வர்கள் தரப்பில் இருந்து கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு வரும் 8ம் தேதி முதல் இந்த கல்வியாண்டு தொடங்கும்.

ஜூன் 10 முதல் ஜூன் 12 வரை பள்ளிகள் பெற்றோர்-ஆசிரியர் கூட்டங்களை நடத்த வேண்டும் மற்றும் பெற்றோரிடமிருந்து கருத்துக்களை பதிவு செய்ய வேண்டும் என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்கள் கருத்துகள் அனைத்தும ஜூன் 15 க்குள் ஆன்லைன் போர்ட்டல் வழியே  அரசுக்கு சமர்ப்பிக்க வேண்டும்.

அரசு பள்ளி மாணவர்களின் நலனுக்காக கர்நாடக கல்வி அமைச்சர் சுரேஷ் குமார், 3 பிரத்யேக தொலைக்காட்சி சேனல்கள் ஒதுக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசுக்கு கடிதம் எழுதி இருந்தது குறிப்பிடத்தக்கது.