பெங்களூரு

நேற்று மாலை காங்கிரஸ் மற்றும் மஜதவின் அதிருப்தி சட்டப்பேரவை உறுப்பினர்களை கர்நாடக சபாநாயகர் ரமேஷ் குமார் சந்தித்து பேசினார்.

கர்நாடக மாநிலத்தில் மஜத – காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.  இந்நிலையில் இந்த கூட்டணிக்கு அளித்த ஆதரவை இரு சுயேச்சைகள் விலக்கிக் கொண்டனர்.  அத்துடன் மஜத மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்கள்14 பேர் ராஜினாமா கடிதத்தை அளித்தனர்.

அவர்கள் ராஜினாமா கடிதம் குறித்து கர்நாடக மாநில சபாநாயகர் முடிவு எதுவும் எடுக்கவில்லை.   கடிதங்கள் சரியாக இல்லாதத்தால் தன்னிடம் நேரில் வந்து விளக்கம் அளிக்க சபாநாயகர் அதிருப்தி உறுப்பினர்களை கேட்டுக் கொண்டார்.  ஆனால் அதற்கு மறுத்த உறுப்பினர்கள் இது குறித்து உச்சநீதிமன்றத்தில் மனு செய்தனர்.

மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற அமர்வு அதிருப்தி உறுப்பினர்கள் நேற்று மாலை 6 மணிக்கு சபாநாயகரை நேரில் சந்தித்து விளக்கம் அளிக்க உத்தரவிட்டது.   அத்துடன் இது குறித்து சபாநாயகர் உடனடியாக  முடிவு  எடுக்க வேண்டும் என அமர்வு கேட்டுக் கொண்டது.  நேரமின்மை காரணமாக உடனடியாக முடிவு எடுக்க முடியாது என சபாநாயகர் அறிவித்துள்ளார்.

நேற்று  மாலை சபாநாயகர் ரமேஷ் குமார் அதிருப்தி உறுப்பினர்களை சந்தித்தார்.  அந்த சந்திப்பு குறித்து ரமேஷ் குமார், “சபாநாயகர் என்னும் முறையில் நடவடிக்கை எடுக்கும் பொறுப்பு எனக்கு உள்ளது.   நான் யாரையும் காப்பாற்ற வேண்டும் என்னும் கட்டாயம் எனக்கு இல்லை.

அதிருப்தி உறுப்பினர்களின் ராஜினாமா கடிதம் முறையாக அளிக்கப்படவில்லை. இந்த சந்திப்பில் நான் அவர்களிடம் முறையாக ராஜினாமா கடிதம் எழுதி என்னிடம் தர வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளேன்.   அதிருப்தி உறுப்பினர்களின் ராஜினாமா அவர்களாக எடுத்த முடிவா அல்லது அரசியல் சூழ்ச்சியா என்பது குறித்து நான் ஆய்வு நடத்த மாட்டேன்.   நான் ஜனநாயக முறைப்படி செயல் படுவேன்.

ஏற்கனவே நான் சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு ராஜினாமா குறித்த விளக்கம் அளிக்க முறையாக சந்தர்ப்பம் வழங்கினேன்.   ஆனால் அவர்கள் அதை ஏற்கவில்லை.  இந்த விவகாரத்தை நேரடியாக முடிகாமல் அவர்கள் நீதிமன்றத்துக்கு சென்று உள்ளனர்” என செய்தியாளர்களிடம் கூறி உள்ளார்.