பெங்களூரு: கர்நாடகாவில் ரூ.2250க்கு கொரோனா பரிசோதனை செய்து கொள்ள தனியார் ஆய்வகங்களுடன், அம்மாநில அரசு ஒப்பந்தம் செய்திருக்கிறது.

நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தென் மாநிலங்களில் கர்நாடகாவில் அதன் தாக்கம் அதிகம். அம்மாநிலத்தில் கொரோனா பரிசோதனைகள் அரசு மருத்துவமனைகளில் செய்யப்பட்டு வருகின்றன.

இந் நிலையில், தனியார் பரிசோதனை மையங்களுடன் மாநில அரசு ஒப்பந்தம் ஒன்றை செய்து கொண்டுள்ளது. அதன்படி கொரோனா பரிசோதனைக்காக தனியார் ஆய்வகங்களுக்கு ரூ.2250ஐ கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து அம்மாநில சுகாதாரத்துறை செயலாளர் ஜாவைத் அக்தர் கூறி இருப்பதாவது: நாங்கள் தனியார் ஆய்வகங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினோம், ரூ .2,250 வீதம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தனியார் ஆய்வகங்களில் மிகச் சில மாதிரிகள் தான் சோதிக்கப்பட்டுள்ளன. நாங்கள் இப்போது அதை பெங்களூரில் உள்ள ஐந்து தனியார் ஆய்வகங்களில் பயன்படுத்தப் போகிறோம்.

கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டத்தில் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக நாங்கள் சோதனையை அதிகரித்து வருகிறோம். ஆனால் பல தனியார் ஆய்வகங்கள் சோதனைக்கு போதுமான மாதிரிகள் கிடைக்கவில்லை. நாங்கள் ஏராளமான மாதிரிகளையும் சேகரித்து வைத்துள்ளோம். எனவே தனியார் ஆய்வகங்களுடன் விலை நிர்ணயம் செய்வது குறித்து அரசாங்கம் ஒரு உடன்பாட்டை எட்டியுள்ளது என்றார்.