கர்நாடக தமிழருக்கு அச்சுறுத்தல்:  இந்திரா செய்ததை மோடி செய்ய முடியாதா?

ராமண்ணா வியூவ்ஸ்:

ராமண்ணா
ராமண்ணா

“கர்நாடகத்தில் வாழும் தமிழ் மக்களுக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதைத் தடுக்கும் பொறுப்பு அம்மாநில (காங்கிரஸ்) அரசுக்குத்தான் உண்டு. மாநில அரசிடம்தான் சட்டம் ஒழுங்கு, காவல் பொறுப்பு உள்ளது” என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜனும், மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனும் இன்ன பிற பாஜக தலைவர்களும் தெரிவிக்கிறார்கள்.

கர்நாடக கலவரம்
கர்நாடக கலவரம்

ஒரு மாநிலத்தில் வாழும் சிறுபான்மையினரைக் காக்கும் பொறுப்பு மாநில அரசுக்கு மட்டும்தானா?

கன்னடர்களை வைத்தே ஒரு வரலாற்று உதாரணம்.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த குண்டுராவ், கர்நாடக முதல்வராக இருந்த சமயம்.  பக்கத்து மாநிலமான கோவாவில், பூர்விக கொங்கணி இன மக்களுககும், அங்கே குடியேறிய கன்னடர்களுக்கும் இடையே மோதல் எழுந்தது.

கன்னட மைனாரிட்டிகள், கடுமையாகத் தாக்கப்பட்டார்கள்.

இந்திரா காந்தி
இந்திரா காந்தி

உடனே கர்நாடக முதல்வர் குண்டுராவ், அப்போது பிரதமராக இருந்த இந்திரா காந்தியிடம், “மத்திய படையை அனுப்பி கோவாவில் கன்னடர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்” என்றார்.

குண்டுராவ்
குண்டுராவ்

கொங்கணி கலவரக்காரர்களோ, “இது ஒரு மாநிலப் பிரச்சினை. மத்திய படை வர உரிமையில்லை” என்றார்கள்.

ஆனால் முதல்வர் குண்டுராவ், “அதற்கு சட்டத்தில் இடம் இருக்கிறது” என்று விளக்கி, பிரதமர் இந்திராவை வலியுறுத்தினார்.

இதையடுத்து  மத்திய படையை கோவாவுக்கு அனுப்பினார் பிரதமர் இந்திரா.  . கன்னடர்கள் பாதுகாப்பாக வாழ வழி கிடைத்தது.

இந்த விசயத்தில் இந்திரா, குண்டுராவ் இருவருமே பாராட்டத்தக்கவர்கள். காரணம், இந்த விவகாரத்தைப் பொறுத்தவரை உள் அரசியல் செய்யாமல் நடவடிக்கை எடுத்தார் பிரதமர் இந்திரா.

அடுத்து.. குண்டுராவ்.

அவர்  தனிக் கட்சிநடத்தி, எம்.பிக்கள் வைத்துக்கொண்டு மத்திய அரசில் அங்கம் வகித்தவர் அல்ல. இந்திராவின் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். இந்திராவின் தொண்டர்.

ஆனாலும் தனது  கட்சியின் பலமிகக் தலைவியை, –  பிரதமரை… தனது மக்களுக்காக வலியுறுத்தும் வல்லமை அவருக்கு இருந்தது.

ஆக, ஒரு மாநிலத்தில் சிறுபான்மை மக்கள் தாக்கப்படும்போது, அம் மக்களை காக்கும் பொறுப்பு மத்திய அரசுக்கு உண்டு..  கூடுதலாகவே உண்டு என்பதை பாஜகவினர் உணர வேண்டும்.

இதை தமிழகத்தை ஆளுவோரும் உணரவேண்டும்.

தமிழக முதல்வராக கருணாநிதி இருந்தபோதும் இப்படி ஒரு கலவர சூழல் ஏற்பட்ட போது  தமிழக மக்களுக்குத்தான் அவர்  அறிவுரை  சொன்னார். “தமிழக மக்களே, கன்னடர்களுக்கு கோபம் வரும்படி நடந்துகொள்ளாதீர்கள்!” என்றார்.

தற்போதைய முதல்வர் ஜெயலலிதாவும் மத்திய அரசை, வலியுறுத்தவில்லை. அவ்வளவு ஏன், தமிழகத்தில் ஒரு கன்னட ஓட்டுநர் தாக்கப்பட்டதும் அம் மாநில முதல்வர் இவருக்கு கடிதம் எழுத.. பதிலுக்கு ஒரு கடிதம் எழுதினார். அவ்வளவுதான்.

இப்போதேனும் குண்டுராவ் காலத்திய சம்பவத்தை ஜெயலலிதாவுக்கு யாரேனும் சொல்லட்டும். அவரது அதிமுக  (மேலவை)  எம்.பிக்களின்  ஆதரவு பாஜகவுக்கு தேவைைப்படும் நிலை. ஆகவே ஜெயலலிதா, “கர்நாடக வாழ் தமிழர்களுக்கு மத்திய அரசு பாதுகாப்பு அளிக்க வேண்டும்” என்று கோரிக்கை வைக்கட்டும்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Indira, karnataka, modi, Ramanna views, Riots, tamils, Threat, இந்திரா, கர்நாடகா, கலவரம், தமிழர், பாதுகாப்பு, மோடி, ராமண்ணா வியூவ்ஸ்
-=-