கர்நாடக தேர்தல் வரலாற்றில் இதுதான் அதிகபட்ச வாக்குப்பதிவு!

பெங்களூரு: கர்நாடகாவில் இதுவரை இல்லாத அதிக அளவாக, இந்த நாடாளுமன்ற தேர்தலில், 68.6% வாக்குகள் பதிவாகியுள்ளன.

இதற்கு முன்னர், கடந்த 1999ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில், 67.6% வாக்குகள் பதிவானதுதான் அதிகபட்சமாக இருந்தது.

கடந்த 2014ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில், 67.2% வாக்குகள் பதிவாகின. இந்த வாக்குப்பதிவு சதவீதம் அதிகரித்திருப்பதால், தங்களுக்கான வெற்றி வாய்ப்பு அதிகரிக்கும் என்று அம்மாநிலத்தின் 3 பிரதான கட்சிகளுமே நம்பிக்கொண்டுள்ளன.

மிக அதிகபட்சமாக மாண்டியா தொகுதியில், 80% வாக்குகள் பதிவாகியுள்ளன. இது, கடந்த 1951ம் ஆண்டிலிருந்து கணக்கிட்டால், அந்த மாநிலத்தில் உள்ள வேறு எந்த தொகுதியையும்விட மிக அதிகம்.

இதற்கு முன்னதாக, தக்ஷின கன்னடா தொகுதியில், 77.15% வாக்குகள் பதிவானதே அதிகபட்சமாக இருந்தது. வாக்குப்பதிவு அதிகரித்ததானது, ஜனநாயகத்தின் மீதான மக்களின் நம்பிக்கையை காட்டுவதாக கூறியுள்ளது காங்கிரஸ் கூட்டணி.