அகமதாபாத்: விஜய் ஹசாரே டிராபி கிரிக்கெட் இறுதிப்போட்டியில், தமிழ்நாடு அணியை, விஜேடி முறையில், 60 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, நான்காவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது கர்நாடக அணி.

முதலில் பேட்டிங் செய்த தமிழ்நாடு அணி, 253 ரன்களை எடுத்திருந்தது. பின்னர், அந்த இலக்கை விரட்டிய கர்நாடக அணி, 1 விக்கெட் மட்டுமே இழந்து 146 ரன்களை எடுத்து ஆடிக்கொண்டிருந்தது.

அந்த நேரத்தில் மொத்தம் 23 ஓவர்கள் முடிந்திருந்தன. ஆனால், மழையால் போதிய வெளிச்சமின்மை ஏற்பட்டது. எனவே, ஆட்டம் கைவிடப்பட்டு, விஜேடி முறையில் கர்நாடக அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதாக அறிவிக்கப்பட்டது. இதன்மூலம், அந்த அணி விஜய் ஹசாரே கோப்பையை நான்காவது முறையாக வென்றது.

கர்நாடக அணியின் ராகுல் 52 ரன்களும், மாயங்க் அகர்வால் 69 ரன்களும் அடித்து களத்தில் இருந்தனர். தமிழ்நாடு அணியின் பந்துவீச்சு சுத்தமாக எடுபடவில்லை. வாஷிங்டன் சுந்தர் மட்டுமே 1 விக்கெட்டை எடுத்தார். அதேசமயம் அவர் கொடுத்த ரன்கள் ஓவருக்கு 8.5. தமிழ்நாடு அணி இந்தக் கோப்பையை மொத்தம் 5 முறை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.