கர்நாடகாவில் 15 நாட்களில் 2 மடங்காகும் கொரோனா: சுகாதார அமைச்சர் ஸ்ரீராமுலு தகவல்

பெங்களூரு: கர்நாடகாவில் கொரோனா பாதிப்பானது அடுத்த 15 முதல் 30 நாட்களில் இரண்டு மடங்காக வாய்ப்பு உள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஸ்ரீராமுலு தெரிவித்துள்ளார்.

கர்நாடகா மாநிலத்தில் 36,216 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒட்டு மொத்தமாக 613 பேர் உயிரிழந்துள்ளனர். 14,716 பேர் குணமடைந்துள்ளனர்.

இந் நிலையில் மாநிலத்தில் கொரோனா நிலவரம் குறித்து சுகாதார அமைச்சர் ஸ்ரீராமுலு கூறி இருப்பதாவது: கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதில் வரப்போகும் 2 மாதங்கள் அரசுக்கு பெரும் சவாலாக இருக்கும்.

மக்கள் யாரும் அச்சப்பட வேண்டியது இல்லை. அரசின் பாதுகாப்பு நடவடிக்கைகளை மீறாமல் அனைவரும் அதனை முறையாக கடைபிடிக்க வேண்டும் என்றார். இதனிடையே, பெங்களூருவில் ஜூலை 14 முதல் 22 வரை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதை ஜேடிஎஸ் தலைவரும், முன்னாள் பிரதருமான எச்.டி குமாரசாமி வரவேற்றுள்ளார்.

கர்நாடகாவில் சில முக்கிய மாவட்டங்களில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு பிறப்பிக்க வேண்டிய அவசியம் உள்ளது. அத்யாவசிய பொருட்களின் போக்குவரத்தைத் தவிர மாவட்டங்களுக்கு இடையேயான பயணங்களை தடை செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.