பெங்களளூர்:

கர்நாடகாவில் முதல் பெண் டிஜிபி பணியிடமாற்றம் செய்யப்படவில்லை என்று முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.

கர்நாடகா முதல்வராக குமாரசாமி பதவி ஏற்பு விழா நேற்று முன் தினம் நடந்தது. இதில் சோனியா காந்தி, ராகுல்காந்தி உள்ளிட்ட பல தலைவர்கள் கலந்துகொண்டனர். இதில் கலந்து கொள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் வந்தார். அவர் வந்த கார் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டது.

நீண்ட நேரமாக நெரிசல் நீடித்ததால் ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த மம்தா நடந்தே விழாவுக்கு சென்றார். அங்கு நெரிசல் குறிதது டிஜிபி நீலாமணி ராஜூவிடம் கோபத்துடன் நடந்து கொண்டார். இது தொடர்பாக முன்னாள் பிரதமர் தேவகவுடா, சரத்பவார் உள்ளிட்டோரிடம் புகார் செய்தார்.

இதை தொடர்ந்து டிஜிபி நீலாமணி ராஜூ பணியிடமாற்றம் செய்யப்பட்டதாக செய்திகள் வெளியானது. இதை குமாரசாமி மறுத்தார். நான் இப்போது முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளேன். பெரும்பான்மை பலத்தை நிரூபித்த பின்னர் தான் இடமாற்ற உத்தரவுகளை பிறப்பிக்க முடியும் என்றார்.

இது குறித்து டிஜிபி கூறுகையில், ‘‘ எனக்கு பணிமாற்ற உத்தரவு எதுவும் வரவில்லை. சம்பவத்தன்று சோனியா, ராகுல்காந்தி கான்வாய் புறப்பட்ட அதே நேரத்தில் மம்தா கான்வாயும் புறப்பட்டது. இதன் காரணமாக மம்தா கான்வாய் சிறிது நேரம் நிறுத்தப்பட்ட போது நெரிசல் ஏற்பட்டுவிட்டது’’ என்றார்.

எனினும் குமாரசாமி பெரும்பான்மை நிரூபித்த பின்னர் மாநிலத்தின் 10 உயர் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படவுள்ளனர். இதில் நீலாமணி ராஜூவும் ஒருவர் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. நீலாமணி ராஜூ கர்நாடகா மாநிலத்தின் முதல் பெண் டிஜிபி ஆவார். உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த இவர் 1983ம் ஆண்டு ஐபிஎஸ் பிரிவை சேர்ந்தவர். 2017ம் ஆண்டில் இவர் கர்நாடகா டிஜிபி.யாக நியமனம் செய்யப்பட்டார்.