ராஜஸ்தான் : காங்கிரஸ் வெற்றியை சொந்தம் கொண்டாடும் இந்து அமைப்பு!

--

ஜெய்ப்பூர்

ராஜஸ்தான் இடைத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றதை இந்து அமைப்பான ஸ்ரீ ராஜ்புத் கார்ணி சேனா கொண்டாடி உள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற இரு பாராளுமன்ற தொகுதிகளிலும் ஒரு சட்டமன்ற தொகுதியிலும் கடந்த திங்கள் அன்று இடைத்தேர்தல் நடந்தது.   இந்த தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது.   மூன்று தொகுதிகளிலும் பாஜக தோல்வி அடைந்து காங்கிரஸ் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியை இந்து அமைப்பான ஸ்ரீ ராஜ்புத் கார்ணி சேனா தொண்டர்கள் கொண்டாடி உள்ளனர்.    பத்மாவத் திரைப்படம் வெளியாகக் கூடாது என இந்த அமைப்பு கடும் போராட்டம் நடத்தியது தெரிந்ததே.

கார்ணி சேனா தலைவர், “இடைத் தேர்தல் வெற்றி ஒரு தனிப்பட்ட கட்சிக்கு கிடைத்த வெற்றி அல்ல.  இது முழுக்க முழுக்க  எங்கள் போராட்டக் குழுவுக்கு கிடைத்த வெற்றி ஆகும்.

எங்கள் போராட்டத்தை பாஜக அரசு கண்டுக் கொள்ளவில்லை.   ஆனால் மக்கள் எங்களுக்கு ஆதரவு அளித்து பாஜக வை தோற்கடித்துள்ளனர்.

தனது போக்கை மாற்றிக் கொள்ளாவிட்டால் பாஜக தொடர்ந்து அனைத்து தேர்தல்களிலும் தோல்வி அடையும்” என கூறி உள்ளார்.