சண்டிகர்:

பாகிஸ்தானில் உள்ள கர்த்தார்புர் புனிதத் தலத்திற்கு செல்லும் வழித்தடத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்.

குருநானக்கின் 550வது ஜெயந்தி விழா வரும் 12-ம் தேதி கொண்டாடப்படுவதை யொட்டி, தேரா பாபா நானக் குருத்வாராவில் நடைபெறும் விழாவில் கர்தார்பூர் வழித்தடத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைக்கிறார்.

முன்னதாக சுல்தான்புர் லோதியில் உள்ள பேர் சாகிப் குருதுவாராவில் பிரதமர் மோடி வழிபாடுகளை செய்ய உள்ளார். பாகிஸ்தானில் இதற்கான பாதையை அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான் இன்று தொடங்கி வைக்கிறார்.

சீக்கிய மதத்தை தோற்றுவித்த குரு நானக், தமது வாழ்நாளின் பெரும்பகுதியை பாகிஸ்தானில் உள்ள கர்தார்பூரில் கழித்தார். அவரது நினைவாக அங்கு அமைந்துள்ள தர்பார் சாஹிப் குருத்வாராவிற்கு சீக்கியர்கள் புனிதப் பயணம் செல்வது வழக்கம். பஞ்சாப் மாநிலம் குருதாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள தேரா பாபா நானக் குருத்வாராவையும் பாகிஸ்தானின் கர்தார்பூரில் உள்ள தர்பார் சாஹிப் குருத்வாராவையும் இணைக்கும் வகையில் புதிய சாலை இரு நாடுகளின் சார்பில்  அமைக்கப் பட்டுள்ளது.

இந்த வழித்தடம் இன்று திறக்கப்படும் நிலையில்,  முதல் நாளில் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், பஞ்சாப் முதலமைச்சர் அமரேந்தர் சிங், மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் உள்பட சுமார்  150 எம்பிக்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் உட்பட 550 பேர் எல்லை தாண்டி கர்த்தார்புர் யாத்திரை மேற்கொள்ள இருப்பதாக தெரிவிக்கப்பட்ட உள்ளது.

கர்த்தார்புர் செல்வோர், பாஸ்போர்ட் மற்றும் அடையாள அட்டைகளை எடுத்துச் செல்லுமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.