திட்டமிட்டபடி கர்தார்பூர் வழித்தடம் செயல்படும்: பாகிஸ்தான் அரசு

லாகூர்: திட்டமிட்டபடி வரும் நவம்பர் மாதம், சீக்கிய யாத்ரிகர்களுக்கான கர்தார்பூர் வழித்தடம் செயல்பாட்டிற்கு வரும் என்று பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.

காஷ்மீர் பிரச்சினையால், கர்தார்பூர் வழித்தட கட்டுமானப் பணிகளை பாகிஸ்தான் நிறுத்தியுள்ளது என்று வெளியான செய்திகளையும் அந்நாடு மறுத்துள்ளது.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானின் சிறப்பு உதவியாளர் ஆஷிக் அவான் கூறியுள்ளதாவது, “இருநாடுகளுக்கு இடையே காஷ்மீர் தொடர்பான பிரச்சினை இருந்தாலும், கர்தார்பூருக்கு வரும் சீக்கியர்களுக்கு பாகிஸ்தானின் கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும்.

திட்டமிட்டபடி நவம்பர் மாதம் முதல் கர்தார்பூர் வழித்தடம் செயல்பாட்டிற்கு வரும். பிரிவினைவாதம் மற்றும் சகிப்பின்மை ஆகியவை அதிகரித்துவரும் இன்றைய சூழலில், கர்தார்பூர் வழித்தடம் மரியாதை மற்றும் பொறுமை ஆகியவற்றைப் பரப்புகிறது.

பாகிஸ்தானில் சிறுபான்மையினர் உரிமைகளைப் பாதுகாப்பதில் பிரதமர் இம்ரான்கானின் அரசு உறுதியாக உள்ளது” என்றார் அவர். இந்த கர்தார்பூரில்தான் சீக்கிய மத நிறுவனர் குருநானக் தேவின் நினைவிடம் அமைந்துள்ளது. இந்தியாவின் பஞ்சாப் மாநில குர்தாஸ்பூர் மாவட்டத்திலிருந்து, கர்தார்பூருக்கு செல்ல பாதை அமைக்கப்பட்டுள்ளது.

You may have missed