மோடி அரசில் நடைபெற்ற 32ஆயிரம் கோடி ரூபாய் ஊழலை மறைக்கவே கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளதாக அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பிரியங்கா சதுர்வேதி குற்றம் சாட்டி உள்ளார்.

இன்று காலை வெளிநாட்டில் இருந்து வந்த முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம், விமான நிலைய வாயிலேயே கைது செய்யப்பட்டு டில்லிக்கு சிபிஐ அதிகாரிகளால் அழைத்துச் செல்லப்பட்டார்.

இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அகில இந்திய  காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் பிரியங்கா திரிவேதி கூறியதாவது:-

மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜக அரசு மீது தினந்தோறும் புதிய புதிய ஊழல் புகார்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. நிரவ் மோடி, மெகுல் சோக்சி, துவாரகா தாஸ் ஆகியோரின் பண மோசடிகளை திசை திருப்புவதற்காக வும், மோடி அரசு தங்கள் அரசின் ஊழலை மறைப்பதற்காகவும் கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளார் என கூறியுள்ளார்.

மேலும், 32,000 கோடி மக்கள் பணத்தை  கொள்ளையடித்த நிரவ் மோடி  நியூயார்க்கில் ஒரு பட்டுக் கட்டிலில் உட்கார்ந்துகொண்டு,  ஒரு நாளுக்கு ஒரு லட்சம் செலவழிக்கிறார் என்று குற்றம் சாட்டிய பிரியங்கா,  ஆனால்  சிபிஐ விசாரணைக்கு ஒத்துழைத்தவர்களை பாரதியஜனதா அரசு வேட்டையாடுகிறது என்றும் குற்றம் சாட்டினார்.