அமலாக்கத்துறை சம்மனை எதிர்த்து கார்த்தி சிதம்பரம் மனு உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணை

 

டில்லி:

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை எதிர்த்து கார்த்தி சிதம்பரம்  உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு   நாளை  விசாரணைக்கு வருகிறது.

காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான ப.சிதம்பரம் 2007-ம் ஆண்டு மத்திய நிதி அமைச்சராக பொறுப்பு வகித்தபோது, ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனத்துக்கு அன்னிய முதலீடுக்கான அனுமதி வழங்கப்பட்டதில் முறைகேடு நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனம் விதிமுறைகளை மீறி ரூ.305 கோடி அந்நிய முதலீட்டை திரட்டியதாக புகார் எழுந்தது.

இதற்காக அந்த நிறுவனத்தின் இயக்குனர்களாக இருந்த பீட்டர் முகர்ஜி-இந்திராணி முகர்ஜி தம்பதியர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்திற்கு லஞ்சம் கொடுத்ததாக வாக்குமூலம் அளித்து இருந்தனர்.

இந்த வாக்குமூலத்தை அடிப்படையாக கொண்டு, கடந்த மாதம் 28-ந் தேதி லண்டனில் இருந்து சென்னை திரும்பிய கார்த்தி சிதம்பரம் விமான நிலையத்தில் வைத்து  கைது செய்யப்பட்டார். சி.பி.ஐ. அதிகாரிகள் அவரை டில்லி அழைத்து சென்று விசாரணை நடத்தி வந்தனர்.

முன்னாள் கணவருக்கு பிறந்த மகள் ஷீனா போராவை கொலை செய்ததாக கைதான இந்திராணி முகர்ஜியும், அவரது கணவர் பீட்டர் முகர்ஜியும் தற்போது மும்பை  சிறையில்  அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் நேற்று அதிகாலை  ஆறு பேர் அடங்கிய சி.பி.ஐ. அதிகாரிகள் குழுவினர் கார்த்தி சிதம்பரத்தை  டில்லியில் இருந்து விமானம் மூலம் மும்பை அழைத்து வந்தனர். பிறகு  காலை 11.15 மணிக்கு சி.பி.ஐ. அதிகாரிகள் கார்த்தி சிதம்பரத்தை மும்பை பைகுல்லா பெண்கள் சிறைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்கள் இந்திராணி முகர்ஜியுடன் கார்த்தி சிதம்பரத்தை நேருக்கு நேர் நிறுத்தி விசாரணை நடத்தினர்.

அப்போது சிறை கதவுகள் அனைத்தும் மூடப்பட்டன. பார்வையாளர்கள் உள்பட எவரும் சிறைக்குள் அனுமதிக்கப்படவில்லை.

ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனத்துக்கு அன்னிய முதலீட்டுக்கு அனுமதி அளிக்க லஞ்சம் பெறப்பட்டதாக கூறப்படும் புகார் உள்ளிட்டவை குறித்து கூடுதல் தகவல்களை பெற இந்த விசாரணை நடந்ததாக  சி.பி.ஐ. வட்டாரம் தெரிவிக்கிறது.

கார்த்தி சிதம்பரம் ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனத்திடம் இருந்து ரூ.10 லட்சம் வாங்கியதாக சி.பி.ஐ. தரப்பு குற்றம்சாட்டி உள்ளது.

சிறையில் நான்கு மணி நேரம் நடந்த விசாரணைக்கு பிறகு பிற்பகல் 3.15 மணிக்கு கார்த்தி சிதம்பரம் சிறையில் இருந்து வெளியே அழைத்து வரப்பட்டார். அப்போது அங்கு செய்தியாளர்கள் திரண்டு இருந்தனர். அவர்களை நோக்கி கார்த்தி சிதம்பரம் சிரித்த முகத்துடன் கையசைத்தார். சி.பி.ஐ. அதிகாரிகள் பயன்படுத்தும் காரின் கதவு படிக்கட்டில் ஏறி நின்றவாறு செய்தியாளர்களை நோக்கி கையசைத்தார். அப்போது கீழே இறங்குமாறு கார்த்தி சிதம்பரத்துக்கு   சி.பி.ஐ. அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

இந்த நிலையில் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை எதிர்த்து கார்த்தி சிதம்பரம் உச்ச நீதிமன்றத்தில்   மனு  தாக்கல் செய்து உள்ளார். இந்த  மனு மீதான  விசாரணை நாளை நடைபெற இருக்கிறது.

 

 

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: karthi chidambaram petition against ED will be enquired tomorrow at SC, அமலாக்கத்துறை சம்மனை எதிர்த்து கார்த்தி சிதம்பரம் மனு  உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணை
-=-