காஷ்மீர் விவகாரம் போல இதர விவகாரங்களில் கருத்து சொல்லலாமே ?: ரஜினிக்கு கார்த்தி சிதம்பரம் கேள்வி

காஷ்மீர் விவகாரம் போல இதர விவகாரங்களிலும் நடிகர் ரஜினிகாந்த் தனது கருத்தை வெளிப்படுத்த வேண்டும் என சிவகங்கை தொகுதி காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த கார்த்தி சிதம்பரம், “நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் ஒரு கருத்தை சொல்லியிருக்கிறார். இதே போல தான் முதலில் பண மதிப்பு நீக்கத்தின் போது, அதை ஆதரித்து பேசினார். ஆனால் 2 வருடத்திற்கு பிறகு, பண மதிப்பு நீக்கத்தால் எத்தனை பேர் பாதிக்கப்பட்டனர் என்று எல்லோருக்குமே தெரியும். நான் இப்போதும் திரும்பச் சொல்கிறேன். பண மதிப்பு நீக்கம் எவ்வளவு ஒரு குருட்டுத்தனமான முடிவோ, அதனுடைய பின்விளைவுகள் எவ்வளவு மோசமாக இருந்ததோ, அதே போல தான் இந்த ஜம்மு காஷ்மீர் விவகாரம் மீதான பின்விளைவுகள் மோசமாக இருக்கும். அதை ரஜினிகாந்த் அவர்கள் ஆதரித்தது எனக்கு வருத்தத்தை ஏற்படுத்துகிறது.

இதை எல்லாம் ஆதரிக்கும் ரஜினிகாந்த், மற்ற விவகாரங்களிலும் தனது கருத்தை சொல்லியாக வேண்டும். பாராளுமன்றத்தில் தகவல் அறியும் உரிமை சட்டத்தை மாற்றி அமைத்திருக்கிறார்கள். ரஜினிகாந்த் அவர்கள் அதை பற்றி கருத்து சொல்ல வேண்டும். உபா சட்டம் ஒன்றை கொண்டுவந்திருக்கிறார். இச்சட்டம் மூலம் தனி நபரை தீவிரவாதிகளாக சித்தரிக்கலாம். அது பற்றி கருத்து சொல்ல வேண்டும். புதிய மெடிகல் கவுன்சில் பில் என்கிற புதிய மசோதாவை கொண்டுவந்திருக்கிறார்கள். இந்தியாவில் 12% மருத்துவர்கள் தமிழகத்தை சார்ந்தவர்கள். தற்போதைய புதிய மசோதாவின் படி 14 வருடத்திற்கு ஒரு முறை அல்லது 12 வருடத்திற்கு ஒருமுறை தான் பிரதிநித்துவ முக்கியத்துவம் கொடுக்கப்படும் நிலை ஏற்படும். தமிழகத்தில் CMC மற்றும் மெட்ராஸ் மெடிக்கல் காலேஜ் என முக்கிய கல்லூரிகளுக்கு கூட பிரதிநித்துவம் கிடையாது. இதை பற்றி ரஜினிகாந்த் கருத்து தெரிவிக்க வேண்டும்.

ரஜினிகாந்த் அவர்கள் அரசியல் கட்சியை துவக்கப்போவதாக கூறுகிறார். அதனால் அவர் குறிப்பிட்ட சிலவற்றுக்கு மட்டும் கருத்து சொல்லாமல், எல்லாவற்றுக்கும் தனது கருத்துக்களை வெளிப்படுத்த வேண்டும். இதற்கெல்லாம் அவர் ஒத்துப்போகிறாரா ? என்பதற்கு கருத்து சொல்லவேண்டும். நீட் தேர்வுக்கு ஆதரவா ? எதிர்ப்பா ? என்பதற்கு கருத்து சொல்ல வேண்டும். நெக்ஸ்ட் தேர்வுக்கு ஆதரவா ? எதிர்ப்பா என்பதற்கு கருத்து சொல்ல வேண்டும். ஒரே ஒரு விவகாரத்தை மட்டும் தேர்வு செய்து கருத்து சொல்லிவிட்டு, இதர விவகாரங்களில் அவர் அமைதியாக இருந்துவிடக்கூடாது” என்று தெரிவித்தார்.