திருவண்ணாமலை:

கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி இன்று  திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலுக்குப் பின்னால் உள்ள 2,668 அடி உயர மலை மீது மாலை 6 மணியளவில் ‘மகா தீபம்’ ஏற்றப்படுகிறது.

திருவண்ணாமலையில் நடைபெறும் கார்த்திகை தீபத் திருவிழா உலகப் பிரசித்திப் பெற்றது. இதற்காக தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்துள்ளனர்.

பஞ்ச பூதத்தலங்களில் அக்னிஸ்தலமாக போற்றப்படுவது திருவண்ணாமலை. நினைத்தாலே முக்தி தருவது திருவண்ணாமலை என்பது ஐதிகம்.

இத்தலத்தில் சிவபெருமான் ஜோதிப்பிழம்பாய் நின்ற இடமே இன்று கார்த்திகைத் திருநாளில் தீபம் ஏற்றப்பட்டு அனைவராலும் வழிபடப்படுகிறது.

இந்த ஆண்டுக்கான கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி கடந்த மாதம் 23ந்தேதி  ஸ்ரீதுர்கையம்மன் உற்சவம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து   ஸ்ரீபிடாரியம்மன் உற்சவ மும்,  ஸ்ரீவிநாயகர் உற்சவமும் நடைபெற்றது. தீபத்திருவிழா கொடியேற்றம்  இன்று காலை கொடியேற்றத் துடன்  தீபத் திருவிழா கோலாகலமாக தொடங்கியது.

அதைத்தொடர்ந்து இன்று திருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்படுகிறது. மாலை 6 மணியளவில் கோயிலின் பின்புறம் உள்ள 2,668 அடி உயர மலை உச்சியில், ‘மகா தீபம்’ ஏற்றப்பட உள்ளது.

தீபம் ஏற்றப்படும்போது, பஞ்ச மூர்த்திகள் தங்கக்கொடி மரம் முன் அலங்கார ரூபத்தில் எழுந்தருளி ஒன்றாக அமர்ந்து, பக்தர்களுக்கு அருள்பாலிப்பர்.

தீபத் திருவிழாவை முன்னிட்டு இன்று ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு செல்வார்கள் என்பதால், அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தீபத் திருவிழாவையொட்டி, திருவண்ணாமலை நகரை சுற்றி 16 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள தாற்காலிக பேருந்து நிலையங்களில் இருந்து 3 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.