டில்லி:

என்எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டு 12 நாட்கள் போலீஸ் காவல் விசாரணை தொடர்ந்து, 12 நாட்கள் திகார் ஜெயிலில் அடைக்க சிபிஐ கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சிபிஐ-ல் கைது செய்யப்பட்ட  கார்த்தி சிதம்பரத்தின் போலீஸ் காவல் 3 முறை நீட்டிக்கப்பட்ட நிலையில், அவரை 12 நாட்கள் நீதிமன்ற காவலில் திகாரில் ஜெயிலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சி.பி.ஐ.யால் கைது செய்யப்பட்டுள்ள கார்த்தி சிதம்பரத்தின், 3வது முறையாக நீட்டிக்கப்பட்ட 3 நாள் போலீஸ் காவல் முடிவடைந்துள்ள நிலையில், டில்லி  பாட்டியாலாவில் உள்ள சிபிஐ  கோர்ட்டில் இன்று மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டார்.

இந்நிலையில், அவரை திகார் ஜெயிலில் அடைக்க சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து கார்த்தி சிதம்பரம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், திகார் ஜெயிலில் மும்பை குண்டுவெடிப்பு குற்றவாளிகள் இருப்பதால், அவரது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும், அதன் காரணமாக அவருக்கு தனி அறை வழங்க வேண்டும் என்றும்,  வீட்டு உணவை வழங்க அனுமதிக்க வேண்டும் என்றும் கோரியிருந்தனர்.

இதற்கு சிபிஐ தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அவருக்கு சிறையில் எந்தவித அச்சுறுத்தலும் இல்லை என்றும், சிறைத்துறை விதிகளின்படியே அவர் சிறையில் அடைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியது.

அதையடுத்து கார்த்தி சார்பில் ஆஜரான வழக்கறிஞர், கார்த்தி சிதம்பரம், முன்னாள் மத்திய அமைச்சரும், இசட்  பாதுகாப்பு கொடுக்கப்பட்டு வரும் சிதம்பரத்தின் மகன் என்றும், அதன் காரணமாக அவருக்கு தனி அறை ஒதுக்க வேண்டும் என்றும் கோரினார்.

இந்நிலையில் கார்த்தி சிதம்பரம் சார்பில் மற்றொரு மனுவும் தாக்கல் செய்யப்பட்டது. அதில், கார்த்தி சிதம்பரத்தின் ஜாமின் மனு மீது தற்போதே விசாரணை நடத்த வேண்டும் என்றும், சிறைச்சாலையில் அவருக்கு தனி கழிப்பறை மற்றும், வீட்டு உணவு, புத்தகங்கள் எடுத்துச் செல்ல அனுமதி அளிக்க வேண்டும் என்று, டில்லி உயர்நீதி மன்ற உத்தரவை மேற்கோள் காட்டி வாதாடினார்.

அதைத்தொடர்ந்து, கார்த்தியின் ஜாமின் மனு குறித்து வரும் 15ந்தேதி விசாரணை நடத்தப்படும் என்ற நீதிபதி, கார்த்திக்குக்கு தனி அறை மற்றும்  வீட்டு உணவு வழங்க மறுப்பு தெரிவித்தும், ஆனால் மருந்து மாத்திரைகள் எடுத்துச்செல்ல அனுமதி வழங்கியும் உத்தரவிட்டுள்ளது.