சென்னை:

நாளை சட்டமன்றத்தில்  நாளை நடைபெறும், எடப்பாடி பழனிச்சாமியின் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில், தி.மு.க. தலைவரும் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினருமான கருணாநிதி கலந்துகொள்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தமிழக ஆளுங்கட்சியான அ.தி.மு.க.வில் ஏற்பட்ட அதிகார போட்டி உச்சமடைந்துள்ளது. அக்கட்சியைச் சேர்ந்த எடப்பாடி பழனிச்சாமி நேற்று முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். அவரது ஆட்சி மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நாளை நடைபெற இருக்கிறது.

அவருக்கு சுமார் 120 எம்.எல்.ஏக்களின் ஆதரவு இருப்பதாக சொல்லப்படுகிறது. எதிர் தரப்பில் ஓ.பி.எஸ் பன்னீர் செல்வத்துக்கு 11 எம்.எல்.ஏக்களின் ஆதரவு உள்ளது.

எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக வாக்களிக்கப்போவதாக பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க.  அறிவித்துள்ளது.  அக் கட்சிக்கு 89 எம்.எல்.ஏக்கள் இருக்கிறார்கள்.

இவர்களில் திருவாரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதி கடந்த பல நாட்களாக தனது கோபாலபுரம் வீட்டிலேயே ஓய்வெடுத்து வருகிறார்.  அறிக்கைகள் விடுவதோ செய்தியாளர்களை சந்திப்பதோ இல்லை.

முதுமை காரணமாக அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஓய்வெடுக்க வேண்டியிருக்கிறது என்றும் சமீபத்தில் அக்கட்சி சார்பாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் கருணாநிதியின் உடல் நிலை தேறிவிட்டதா, நாளை நடைபெறும் முக்கியமான வாக்கெடுப்பில் கலந்துகொள்ள சட்டமன்றம் வருவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

திமுக தரப்பில் விசாரித்தபோது, “கருணாநிதியின் உடல் நிலையில் பெரிய முன்னேற்றம் இல்லை.  நாளைய வாக்கெடுப்பில் அவர் கலந்துகொள்ள வாய்ப்பு இல்லை” என்று தகவல் கிடைத்துள்ளது.