இன்று மாலை கலைஞர் கருணாநிதி நினைவேந்தல் கூட்டம்: தேசிய தலைவர்கள் பங்கேற்பு…

சென்னை:

றைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு இன்று சென்னையில் நினைவேந்தல் கூட்டம் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் நாடு முழுவதும் இருந்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கலந்துகொள்கிறார்கள்.

சென்னை நந்தனத்தில் உள்ள  ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் மறைந்த திமுக தலவர் கருணாநிதிக்கு இன்று மாலை புகழஞ்சலி கூட்டம் நடைபெறுகிறது. தெற்கில் உதித்தெழுந்த சூரியன் என்ற பெயரில் அரசியல் தலைவர்கள் புகழாஞ்சலி செலுத்த உள்ளனர்.

இந்த நிகழ்ச்சிக்கு திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் தலைமை தாங்குகிறார். தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் முன்னிலை வகிக்கிறார்.  தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் வரவேற்புரையாற்றுகிறார்.

இன்று மாலை நடைபெற உள்ள நினைவேந்தல் நிகழ்ச்சியில் பாஜ தலைவர் அமித்ஷா கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் கலந்துகொள்ளாததால், அவருக்கு பதிலாக  மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, பாஜக தேசிய பொதுச் செயலாளர் முரளிதர ராவ் கலந்துகொள்கின்றனர்.

மேலும், காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத், முன்னாள் பிரதமர் தேவகவுடா, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார்,  ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் பரூக் அப்துல்லா, பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீத்தாராம் எச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் டி.ராஜா , இந்தியன் யூனியன் மூஸ்லீம் லீக் தலைவர் காதர் முகைதீன், திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர் டெரிக் ஓ ப்ரைன் உள்பட ஏரளமான  அரசியல் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

தி.மு.க. தென்சென்னை மாவட்டச் செயலாளரும் முன்னாள் மேயருமான  மா. சுப்பிரமணியன் நன்றியுரையாற்றுகிறார்.

வாகனங்கள் நிறுத்தும் இடம்:

நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு வரும் தொண்டர்கள் தங்கள் வாகனங்களை எங்கு நிறுத்த வேண்டும் என்பது குறித்து தென் சென்னை மாவட்ட செயலாளர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சென்னை வடக்கு, சென்னை கிழக்கு, சென்னை மேற்கு, சென்னை தெற்கு, திருவள்ளுவர் வடக்கு, திருவள்ளுவர் தெற்கு ஆகிய மாவட்டங்களிலிருந்து வரும் வாகனங்கள் அண்ணா சாலை தேவர் சிலை வழியாக நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. கேட் வழியாக உள்ளே வரவேண்டும். காஞ்சீபுரம் வடக்கு, வேலூர், திருவண்ணாமலை, காஞ்சீபுரம் தெற்கு, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களி லிருந்து வரும் தொண்டர்கள் சைதாப்பேட்டை வழியாக தாடண்டர் நகர் அரசு குடியிருப்பு வழியாக வாகனங்களை நிறுத்திவிட்டு நிகழ்ச்சிக்கு வரவேண்டும்.

ஒட்டுமொத்தமாக சென்னையில் இருந்து வருகை தரும் இரு சக்கர வாகனங்கள் அனைத்தும் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ., மெயின் கேட் இடதுபுறம் உள்ள பகுதிகளில் தங்கள் வாகனங்களை நிறுத்தி விட்டு நிகழ்ச்சிக்கு வரவேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.