கருணாநிதி இரங்கல் தீர்மானம்: சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கண்ணீர் வரவழைத்த துரைமுருகன் பேச்சு

சென்னை:

ருணாநிதி இரங்கல் தீர்மானம் தொடர்பாக பேசிய துரைமுகனின் கண்ணீர் மற்றும் கதறி அழுத பேச்சு தமிழக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கண்ணீர் வரவழைத்து பெரும் சோகத்தை உருவாக்கியது.

தமிழக சட்டமன்றத்தில் இன்று மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதிக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தீர்மானத்தை வாசித்து துணைமுதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கருணாநிதி குறித்து புகழ்ந்து பேசினார். அதைத்தொடர்ந்து திமுக சார்பில் பேசிய, சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைதலை வரும், திமுக பொருளாளருமான துரைமுகன் கருணாநிதி குறித்து பேசும்போது, சோகத்தை அடக்க முடியாமல் குலுங்கி குலுங்கி அழுதார். இது சட்டமன்ற உறுப்பினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

சட்டமன்றத்தில் கருணாநிதி குறித்து துரைமுருகன் பேசியதாவது,  என்னை இந்த மன்றத்தில் பேச அழைக்கும் போதெல்லாம் உணர்ச்சியோடு, எழுச்சியோடு எழுந்து நிற்பேன். ஆனால் இன்று கலைஞருக்காக இரங்கல் தீர்மானத்தில் பேச அழைத்த போது உடல் தளர்ந்து உள்ளம் சோர்ந்து துவண்ட நிலையில் இருக்கிறேன். 95 ஆண்டு காலம் வாழ்ந்தவர் கலைஞர். தமிழுக் காக, தமிழ் நாட்டுக்காக, தமிழ் மக்களுக்காக உழைத்து விட்டு அண்ணாவின் பக்கத்திலே ஓய்வெடுக்கிறார் கலைஞர்.

எனது சார்பிலும், மு.க. ஸ்டாலின் சார்பிலும் கனத்த இதயத்தோடு கண்ணீரை அடக்கிக் கொண்டு பேச முற்படுகிறேன். கலைஞர் தனி மனிதர் அல்ல. பன்முகத்தன்மை கொண்டவர். அரசியல் வித்தகர், இலக்கிய வேந்தர், கவிதைக் கடல், புரட்சிகரமான வசனங்களை திரையில் தீட்டியவர், அவரை ஒரு முகத்தோடு அடக்கி விட முடியாது.

கலைஞர் 95 ஆண்டு காலம் அதாவது 34 ஆயிரத்து 258 நாட்கள் வாழ்ந்தவர். இதில் எம்.எல்.ஏ.வாக பணியாற்றியது 20 ஆயிரத்து 411 நாட்கள். அதாவது 56 ஆண்டு காலம் சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றி இருக்கிறார். தான் வாழ்ந்த நாளில் பாதி நாட்களுக்கு மேல் இந்த அவையில் அமர்ந்து பணியாற்றியவர். 13 தேர்தல்களில் நின்று வென்றவர். எதிர்க்கட்சி தலைவர், அமைச்சர், முதல்- அமைச்சர் என 56 ஆண்டு காலம் சட்டமன்றத்தில் பணியாற்றியவர். முதல்- அமைச்சராக 6863 நாட்கள் அதாவது 9 ஆண்டுகள் பணியாற்றினார். 17 ஆயிரத்து 908 நாட்கள் தி.மு.க. கட்சித் தலைவராக செயல்பட்டார்.

கலைஞர் வரலாற்று சிறப்பு மிக்க அநேக செயல்களை செய்துள்ளார். மதராஸ் என்ற பெயரை சென்னை என மாற்றியவர் கலைஞர். சுதந்திர தினத்தன்று கோட்டையில் கொடி ஏற்றும் உரிமையை மாநில முதல்-அமைச்சர்களுக்கு பெற்றுத் தந்தவர். தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்து பெற்றுத் தந்தவர். பெண்களுக்கு சொத்தில் பங்கு பெற்றுத் தந்தவர். இப்படி எண்ணற்ற சாதனைகளை புரிந்தவர். பல குடியரசு தலைவர்களை உருவாக்கியவர். என்னை தத்தெடுத்த பிள்ளையாக வளர்த்து உயர்த்தியவர்.

எனக்கு இருதய அறுவை சிகிச்சை நடந்தபோது 2-வது முறையாக உயிர் கொடுத்தவர். நான் அன்று இறந்திருந்தால் எனது உடல் மீது அவர் கண்ணீர் சிந்தி இருப்பார். ஆனால் எனது துர்பாக்கியம் என் தலைவர் உடல் மீது நான் கண்ணீர் சிந்தும் நிலை ஏற்பட்டு விட்டது என்று பேசிக்கொண்டிருக்கும்போதே அவரது கண்ணில் இருந்த கண்ணீர் வழிந்தோடியது…. சோகத்தை அடக்க முடியாமல் கதறி அழுதார். அதைத்தொடர்ந்து ஸ்டாலின் அவரை இருக்கையில் அமர வைத்தார். இருந்தாலும் சிறிது நேரம் துரைமுருகன் தொடர்ந்து அழுதபடியே இருந்தார். அவரை  மு.க. ஸ்டாலின் ஆறுதல் படுத்தினார்.

இந்த சம்பவம் தமிழக சட்டமன்ற உறுப்பினர்களிடையே சோகத்தையும், கண்ணீரையும் வரவழைத்தது.