சென்னை,
திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் அடுத்த ஆண்டு ஜன. 4ந்தேதி  திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று கட்சியின் பொதுச்செயலாளர் அறிவித்து உள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் ஜனவரி 4-ம் தேதி கட்சியின் பொதுக்குழு நடைபெறுவதாக கட்சியின் பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவித்துள்ளார்.
ஏற்கனவே டிசம்பர் 20ந்தேதி திமுக பொதுக்குழு நடைபெறும் என்று கட்சி தலைமை அறிவித்திருந்த நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக திமுக தலைவர் கருணாநிதி, மீண்டும் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்ட நிலையில், கடந்த 23-ம் தேதி கருணாநிதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.
இந்தநிலையில், திமுக பொதுக்குழு கூட்டம் ஜனவரி 4-ம் தேதி காலை 9 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
“தலைவர் கலைஞர் தலைமையில் 20-12-2016 செவ்வாய்க் கிழமை அன்று, சென்னை,  அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு, ஒத்திவைக்கப்பட்ட தி.மு.க. பொதுக்குழுக் கூட்டம் வருகிற 4-1-2017 புதன்கிழமை  காலை 9 மணி அளவில் நடைபெறும்.
இந்த கூட்டத்தில் கட்சியின் ஆக்கப்பணிகள் மற்றும் தணிக்கைக்குழு அறிக்கை குறித்து விவாதிக்கப்பட இருக்கிறது.
பொதுக்குழு உறுப்பினர்களுக்கு ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்ட பொதுக்குழு கூட்ட அழைப்பி தழினை இக்கூட்டத்திற்கு வரும்போது தவறாமல் உடன் கொண்டு வர வேண்டும்” என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
திமுகவின் செயல் தலைவராக ஸ்டாலின் நியமிக்கப்பட இருப்பதாக வரும் தகவல்கள் குறித்து, திமுகவை சேர்ந்த  மாநிலங்களவை உறுப்பினரும், மகளிர் அணி தலைவியுமான கனிமொழி யிடம் கேட்டதற்கு, இதுகுறித்த அறிவிப்பு பொதுக்குழுவுக்கு பிறகே தெரியவரும் என்றார்.