கருணாநிதி நலமுடன் இருக்கிறார்: கோபாலபுரத்தில் வைகோ பேட்டி…

சென்னை:

திமுக தலைவர் கருணாநிதி நலமுடன் இருக்கிறார் என்று  கோபாலபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த வைகோ தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரிக்க சென்னை கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதி இல்லத்துக்கு மதிமுக பொதுச்செயலாளர்  வைகோ வருகை தந்தார். அங்கு கருணாநிதியின் உடல்நிலை குறித்து திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட கருணா நிதி குடும்பத்தினரிடம் விசாரித்தார்.

அதைத்தொடர்ந்து கருணாநிதி இல்லத்தை விட்டு  வெளியே வந்த வைகோ, செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, கருணாநிதி நலமுடன் இருக்கிறார் என்று கூறினார்.

ட்ரக்கியாஸ்டமி செய்தால் சில நேரங்களில் காய்ச்சல் ஏற்படுவது வழக்கம். குணப்படுத்த மருத்துவர்கள் தக்க சிகிச்சையளித்து வருகிறார்கள். கருணாநிதி நலமோடு இருப்பதாக ஸ்டாலின் கூறினார். அவர் முழுமையாக நலம் பெற்று, அதே காந்த குரலோடு மக்களை சந்திக்கும் வாய்ப்பை இயற்கை அன்னை ஏற்படுத்தி தருவாள் என்ற நம்பிக்கையோடு உள்ளேன்.

இவ்வாறு வைகோ கூறினார்.

திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலம்குறித்து விசாரிக்க சென்னை கோபாலபுரம் இல்லத்திற்கு மு.க.தமிழரசு, க.அன்பழகன், வேல்முருகன், வைகோ, பீட்டர் அல்போன்ஸ்  போன்ற முக்கிய தலைவர்கள் வருகை தந்துள்ளனர்.