Random image

அமைதி பேரணி வெற்றி: மு.க.அழகிரி மகன் துரை தயாநிதி

சென்னை:

மு.க.அழகிரி நடத்திய அமைதி பேரணி வெற்றிபெற்றதாக அழகிரியின் மகன் துரை தயாநிதி தெரிவித்து உள்ளார். பேரணிக்கு நாங்கள் எதிர்பார்த்ததை விட அதிக தொண்டர்கள் கலந்துகொண்டு பேரணியை வெற்றிபெறச் செய்துள்ளனர் என்று கூறினார்.

திமுகவில் ஏற்பட்ட குடும்ப மோதல் காரணமாக கடந்த 2014-ம் ஆண்டு மார்ச் 25-ந்தேதி கட்சியில் இருந்து தென் மாவட்ட செயலாளரான மு.க.அழகிரி  நீக்கப்பட்டார். அவரை கட்சியில் சேர்க்க கருணாநிதி முயன்றும்,  மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு காரணமாக தடைபட்டு வந்தது.

இந்த நிலையில், திமுக தலைவர் கருணாநிதி காலமானதை தொடர்ந்து மீண்டும் குடும்ப மோதல் உருவானது. கடந்த மாதம் (ஆகஸ்டு)  13-ந்தேதி தனது குடும்பத்தினருடன் கருணாநிதி நினைவிடம் வந்து அஞ்சலி செலுத்திய மு.க.அழகிரி, ‘எனது அப்பாவிடம் வந்து ஆதங்கத்தை தெரிவித்தேன். அது என்ன என்பது உங்களுக்கு இப்போது தெரியாது. கருணாநிதியிடம் உண்மையாக விசுவாசம் கொண்ட தொண்டர்கள் அனைவரும் என் பக்கம்தான் இருக்கிறார்கள்’ என்று அதிரடியாக கூறினார்.

சென்னையில் கருணாநிதி நினைவிடம் நோக்கி செப்டம்பர் 5-ம் தேதி அமைதி பேரணி நடத்த இருப்பதாகவும், அதில் தனது ஆதரவாளர்கள் ஒரு லட்சம் பேர் கலந்துகொள்வார்கள் என்றும் அறிவித்தார்.

அதன்படி இன்று பேரணி நடைபெற்றது. திருவல்லிக்கேணி போலீஸ் நிலையம் அருகே வாலாஜா சாலையில் இருந்து இன்று காலை 11.25 மணிக்கு மு.க.அழகிரி தலைமையில் அமைதி பேரணி தொடங்கியது.  பேரணியில் மு.க அழகிரி, துரை தயாநிதி அழகிரி, கயல்விழி அழகிரி ஆகியோர் கலந்து கொண்டனர். பேரணியில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து வந்திருந்த ஏராளமானோர் பேரணியில் கலந்துகொண்டுள்ளனர். கருப்பு சட்டையில் தொண்டர்கள் வந்திருந்தனர்.

இந்த பேரணியில் சுமார் 1 லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என்று மு.க.அழகிரி கூறியிருந்தார். ஆனால்,  எவ்வளவு பேர் கலந்துகொண்டார்கள் என்ற விவரம் அறிவிக்கப்படவில்லை. அதைத்தொடர்ந்துசெய்தியாளர்களிடம் பேசிய துரை தயாநிதி, பேரணி வர இருந்த தொண்டர்கள்  பல இடங்களில்  தடுக்கப்பட்டனர்.  இருந்தாலும்  எதிர்பார்த்ததை விட தொண்டர்கள் அதிக அளவில் குவிந்தனர். மு.க அழகிரி தலைமையிலான அமைதி பேரணி வெற்றியடைந்து உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

பேரணி குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மு.க.அழகிரி,  எனது தந்தை  கருணாநிதி இறந்த 30-ம் நாளில் அஞ்சலி செலுத்தவே  அமைதி பேரணி நடைபெற்றது. வேறு எந்த நோக்கமும் கிடையாது  இந்த பேரணியில் கலந்து கொண்ட கலைஞரின் உண்மை யான தொண்டர்களுக்கு நன்றி. இந்த பேரணிக்கு  ஒத்துழைத்த காவல்துறைக்கும், பத்திரிகையாளர்களுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

இந்த பேரணியில் கலந்து கொண்ட அனைவரையும் கட்சியில் இருந்து நீக்குவார்களா? எனவும் கேள்வி எழுப்பினார்.

திமுகவுக்கு எதிராக அதிரடி அறிவிப்புகளை வெளியிடுவார் என எதிர்பார்த்திருந்த செய்தியாளர்கள், அழகிரியின் பதிலால் நொந்து போனார்கள்.