தி.மு.க. உடன்பிறப்புகளின் குமுறல் தொடர்கிறது:
download (1)
“இந்த சட்டமன்றத் தேர்தலின் போதும், பொறுப்புகளை எல்லாம் தளபதியாரே எடுத்துக்கொண்டார்.  ஆனால் வலுவான கூட்டணியை அமைக்கத்  தவறினார்.
மகாபலிபுரத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸின் குடும்ப திருமணம் நடந்தது. அந்த நிகழ்வுக்கு  முன்னதாகவே சென்றிருந்த தளபதி,  வைகோ வரும்வரை காத்திருந்து பார்த்தார்:  கைகுலுக்கினார்: அளவளாவினார்.
மறுநாள் மதுரைக்கு ஒரே விமானத்தில் இருவரும் பயணித்தார்கள்.
தளபதியாரின் தம்பி தமிழரசு இல்ல திருமணத்துக்கு, வைகோவின் வீடு தேடிச் சென்று அழைப்பிழ் அளித்தார் தளபதியார்.
ஆகவே, தி.மு.க. – ம.தி.மு.க. கூட்டணி உறுதியாகிவிட்டதாக தொண்டர்கள் நினைத்தார்கள்.
ஆனால் தமிழரசு இல்ல திருமணத்துக்கு வந்த வைகோவிடம், முகம் கொடுத்து பேசவில்லை தளபதியார். வைகோவை பாராட்டி, தலைவர் கலைஞரையும் அவர் பேச விடவில்லை.
இன்னும் சொல்லப்போனால் அந்த திருமணவிழாவில், மேடையில் வைகோவுக்கு இருக்கைகூட ஒதுக்கவில்லை. திண்டாடிப்போனார் வைகோ.
அந்த சமயத்தில் கே.எஸ். ராதாகிருஷ்ணன்தான் வைகோவுக்கு இருக்கை ஏற்பாடு செய்துகொடுத்தார்.
அது மட்டுமல்ல.. வைகோ சிறந்த பேச்சாளர் என்பதை சொல்லி அறிய வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் அந்த திருமண விழாவில் வைகோவுக்குப் பிறகு பா.ஜ.க. தமிழக தலைவர் தமிழிசையை பேச வைத்தார்கள்.
இதெல்லாம், வைகோ மனதில் வாட்டத்தை ஏற்படுத்தியது.
அது மட்டுமல்ல…  தளபதியாரின் மருமகன் சபரீசன் தனது நண்பர்களுடன் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் பேசிக்கொண்டிருந்தபோது, “வைகோ வரட்டும். வந்தால் ஐந்து அல்லது ஆறு சீட் கொடுக்கலாம்.. அவ்வளவுதான்” என்று கிண்டலாக பேசியதும் வைகோ காதுக்குப் போனது.
அந்த காலகட்டத்தில் தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்கலாம் என்றுதானஅ வைகோ எண்ணியிருந்தார். தனது எண்ணத்தை தனது கட்சி மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திலும் வெளிப்படுத்தி இருந்தார்.
ஆனால் தளபதி மற்றும் அவரது மருமகனின் நடவடிக்கைகளால்  வைகோவின் மனதில்  மாற்றம் ஏற்பட்டது.
வைகோவுக்கு உரிய மரியாதை கொடுத்து கூட்டணிக்குள் இழுத்திருந்தால், அவருடன் விஜயகாந்தின் தே.மு.தி.கவும் வந்திருக்கும்.
தேர்தல் நேரத்தில் விஜயகாந்தை வருந்தி வருந்தி கலைஞர் அழைத்திருக்கத் தேவை இருந்திருக்காது.
அருமையான கூட்டணி அமைந்து, தி.மு.க. இந்நேரம் ஆட்சிகட்டிலில் அமர்ந்திருக்கும்.
இன்னொரு விசயம்.
விஜயகாந்திடமும் அவரது மனைவி பிரேமலதாவிடமும், தி.மு.க. தரப்பில் இருந்து ஆளாளுக்கு பேசினார்கள். தி.மு.க. தூதர்களாக எ.வ.வேலு, ஜகத்ரட்சகன், சன் டிவி கலாநிதி மாறன்.. இப்படி பலர் பேசினார்கள். இவர்கள் பேசியது, கூட்டணிக்கான பேச்சாக இல்லை என்றும் ஒரு கருத்து நிலவுகிறது. அதாவது, வைகோவை கூட்டணிக்கு இழுத்திருந்தால்.. அவரே விஜயகாந்த் மற்றும் பிரேமலதாவிடம் பேசி கூட்டணிக்கு இழுத்திருப்பார்.
அதுமட்டுமல்ல… காங்கிரஸிடம் உரிய முறையில் பேசி ஜி.கே. வாசனையும் கூட்டணியில் சேர்த்திருக்க வேண்டும். அதையும் செய்யத்தவறினார் தளபதி.
இதுவே தலைவர் கலைஞரின் பார்வையில் தேர்தல் கூட்டணி ஏற்பாடுகள் நடந்திருக்குமானால், இந்நேரம் சிறப்பான கூட்டணி அமைந்திருக்கும். தி.மு.க. ஆட்சி அமைத்திருக்கும். கலைஞர் முதல்வர் பதவியை அலங்கரித்திருப்பார்.
ஆகவேதான் சொல்கிறோம்.. இனியாவது கலைஞருக்கு வழிவிட்டு தளபதி ஒதுங்க வேண்டும். அப்போதுதான் கட்சிக்கு நல்லது நடக்கும்” – என்று சொல்லி முடித்தார்கள் அந்த தி.மு.க. உடன்பிறப்புக்கள்.