Random image

கலைஞருக்கு வழி விடுங்கள் தளபதியாரே…!:   உடன் பிறப்புகளின்  குமுறல்

துவரை இல்லாத அளவுக்கு பலமான எதிர்க்கட்சி  என்ற அந்தஸ்தில் சட்டமன்றத்தில் இடம் பிடித்திருக்கிறது தி.மு.கழகம்.  89 இடங்களைப்  பெற்றிருக்கும் அக்கட்சி, கூட்டணியோடு 98 இடங்களை அள்ளியிருக்கிறது.

ஆட்சியைப் பிடிக்கமுடியாவிட்டாலும், கடந்த தேர்தலைவிட அதிக வாக்கு.. அதிக இடங்கள் என்று அக் கட்சி ஆதரவாளர்கள் ஆறுதல் பட்டுக்கொண்டிருக்க… “ஆட்சியைப் பிடித்திருக்க வேண்டிய கட்சி, இப்போது எதிர்க்கட்சியாக அமர்ந்திருக்கிறது. ஆட்சியில் அமரவைக்க மக்கள் விரும்பியும், மு.க. ஸ்டாலினின் அணுகுமுறையால் அந்த நல்வாய்ப்பு தவறிப்போய்விட்டது” என்று ஆதங்கப்படுகிறார்கள் தீவிர தி.மு.க. அனுதாபிகள் சிலர்.

மு.க. ஸ்டாலின்
மு.க. ஸ்டாலின்

அவர்களது கருத்து இதுதான்:

“தொடர்ந்து எம்.ஜி.ஆர். வெற்றி பெற்று வந்த காலகட்டத்திலேயே கட்சியை உயிர்ப்போடு வைத்திருந்தார் கலைஞர். அதற்குக் காரணம், அவரது மதியூக மந்திரியாக முரசொலி மாறன் இருந்தார்.

அதனால்தான் எம்.ஜி.ஆரின் நீண்ட கால ஆட்சிக்குப் பிறகும் 1989ம் ஆண்டு,  ஆட்சியைப் பிடித்தது தி.மு.கழகம். 1991ம் ஆண்டு  சட்டமன்றத் தேர்தலில் ராஜீவ் படுகொலை காரணமாக, தி.மு.க. படு மோசமான தோலவியைத் தழுவியது. ஆனாலும் அடுத்து வந்த 1996ம் ஆண்டு தேர்தலில் பெரு வெற்றி பெற்றது. அதற்குக் காரணம், கலைஞரும், முரசொலி மாறனும்தான். அவர்கள்தான் கட்சியின் லகானை தங்கள் கைகளில் வைத்திருந்தார்கள்.

2001ம் ஆண்டு சட்டன்றத் தேர்தலில் லகானை கையில் எடுத்தார் மு.க. ஸ்டாலின். முதல் தேர்தலே முதல் கோணல் ஆனது.

சாதிக் கட்சிகளை எல்லாம் ஓரணியில் இணைத்தார்.  அப்படியான ஓர் அணி வெற்றி பெறாது என்று சீனியர்கள் பலர் சொல்லியும் அவர் கேட்கவில்லை

அவ்வளவு ஏன்..  முரசொலி மாறன் சொல்லியும் ஸ்டாலின் காதுகொடுக்கவில்லை.  “எப்படியோ போங்க..” என்று கோபத்துடன் கோபாலபுரத்தைவிட்டு புறப்பட்ட முரசொலி மாறன், கிட்டதட்ட ஒருமாதம் வரை, அந்தப்பக்கம் எட்டிப்பார்க்கவில்லை. கருணாநிதி தொடர்புகொள்ள முயன்றும், தொடர்பு எல்லைக்கு அப்பாலேயே இருந்தார் மாறன்.

அவரது கணிப்பு மிகச் சரி என்பதை  அந்தத் தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தின.

அதன் பிறகு வந்த 2004ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில், ஸ்டாலின் சற்றே ஒதுங்கியிருந்தார். தலைவர் கலைஞரே முக்கிய முடிவுகளை எடுத்தார்.

அந்த காலகட்டத்தில்தான், பொடா சிறையில் இருந்த வைகோவை சிறையில் சந்தித்தார், ம.தி.மு.கவையும் கூட்டணியில் இணைத்தார்.  அதற்கு முன்புதான் மாநிலத்தை ஆண்ட அ.தி.மு.க., எஸ்மா – டெஸ்மா என்று அரசு ஊழியர்களை பாடாய்ப்படுத்தியது, மதமாற்ற தடை சட்டம் கொண்டுவந்து சிறுபான்மையினர் எதிர்ப்பைச் சம்பாதித்தது… இதையெல்லாம் மிக லாவகமாக தனக்குச் சாதமாக பயன்படுத்தினார் கலைஞர். அந்த நாடாளுமன்றத் தேர்தலில் கட்சி கணிசமான வெற்றி பெற்றது. மத்திய அமைச்சரவையிலும் இடம் பெற்றது.

ஆனால் 2006ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது மீண்டும் ஸ்டாலின் ஆதிக்கம் ஏற்பட்டது. கூட்டணி வைப்பது, தொகுதி ஒதுக்குவது, வேட்பாளர் தேர்வு எல்லாவற்றிலும் தலையிட்டார் மு.க. ஸ்டாலின்.

அத் தேர்தலில் தி.மு.க. பெரிதாக வெற்றி பெறவில்லை. காங்கிரஸின் தயவால் மைனாரிட்டி ஆட்சியாக ஐந்து வருடங்களைக் கழித்தது.

2009 பாராளுமன்ற தேர்தலிலும் ஸ்டாலின் ஆதிக்கம்தான். முழுமையான வெற்றி கிடைக்கவில்லை.

2011ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலிலும் முக ஸ்டாலின் மூக்கை நுழைத்தார். தோல்வி.   2014 பாராளுமன்றத் தேர்தலிலும் அவரது தலைமையிலேயே தி.மு.க. களம் கண்டது.. அதுவும் தோல்வி. பெருந்தோல்வி” என்று பட்டியலிட்ட தி.மு.க. சீனியர்கள், தற்போதைய தேர்தல் குறித்த விசயங்களுக்கு வந்தார்கள்.

“இப்போது 2016 சட்டமன்றத் தேர்தலிலும் மு.க. ஸ்டாலின்தான் ஆதிக்கம் செலுத்தினார். அவர் மட்டுமல்ல.. அவரது மனைவி துர்கா, மருமகன் சபரீசன் ஆகியோர்தான் பல முக்கிய விசயங்களை தீர்மானித்தார்கள்.

வேட்பாளர் தேர்வில் பல பெரும் தவறுகளைச் செய்தது மு.க. ஸ்டாலின் – துர்கா – சபரீசன் கூட்டணி.

உதாரமமாக சிலவற்றைச் சொல்கிறோம்.

மேற்கு மாவட்டத்தில் பொங்கலூர் பழனிச்சாமிக்கு என்று தனி செல்வாக்கு உண்டு. தி.மு.கழகத்தை உயிர்ப்படன் வைத்திருப்பவரர்களில் அவரும் ஒருவர். இந்தத் தேர்தலில் அவர் புறக்கணிக்கப்பட்டார்.

அதே போல ஈரோடு முத்துசாமி. அ.தி.மு.கவில் இருந்து வந்தாலும் தி.மு.க. தொண்டர்களுடன் ஒன்றாக கலந்தவர். தீவிர உழைப்பாளி.  அவருக்கு ஒதுக்க வேண்டிய தொகுதியை, தே.மு.தி.கவில் இருந்து வந்த சந்திரமோகனுக்குக் கொடுத்தார்கள். முத்துசாமிக்கு மாற்று தொகுதி அளித்தார்கள்.  விளைவு.. தோல்வி.

நாமக்கல் பகுதியில் செல்வாக்கு மிக்க  காந்திசெல்வனுக்கு சீட் இல்லை.  ராமநாதபுரம் பவானி ராஜேந்திரன்,  நாமக்கல் காந்தி செல்வன், திருவண்ணாமலை ஸ்ரீதரன்,  சபாபதி மோகன் என்று மக்கள் செல்வாக்கு மிக்க பலர் ஒதுக்கப்பட்டார்கள்.

அவ்வளவு ஏன்… மதுரையில் இன்றளவும் பொது மக்களிடமும், கட்சித் தொண்டர்களிடமும் நல்ல அறிமுகமும் செல்வாக்கும் உல்ளவர் பொன். முத்துராமலிங்கம். அவரை ஒதுக்கிவிட்டார்கள்.

அங்கே பாக்யநாதன் என்பவருக்கு சீட் கொடுத்தார்கள். அவர் யாரென்றே கட்சிக்காரர்களுக்குத் தெரியாது. லாட்டரி வியாபாரி ஒருவரின் சிபாரிசில் அவருக்கு சீட் தரப்பட்டதாம்.

அது மட்டுமல்ல… துரைமுருகன், சுப்புலட்சுமி ஜெகதீசன், ஐ பெரியசாமி, கருர் பழனிச்சாமி, நேரு, பொன்முடி, எம்.ஆர்.கே பன்னீர் செல்வம்,  தூத்துக்குடி பெரியசாமி,  போன்றவர்கள் தங்கள் “ஆளுகைக்கு” உட்பட்ட மாவட்டங்களில் தகுதியான பிறர் வருவதைத் தடுக்கிறார்கள்.

ஒரே மாவட்டத்திர்குள் ஐ. பெரியசாமியும் அவரது மகனும் போட்டியிட்டு வெற்றி பெற்றிருப்பதே இதற்கு சாட்சி. அதே போல  தூத்துகுடியில் பெரியசமியின் மகன்  அல்லது மகள்தான் தொடர்ந்து திமுக சார்பாக நிற்கிறார்கள்.   இப்படி பல தொகுதிகளைச் சொல்லலாம். இது போன்ற நடவடிக்கைகளால்தான் மக்கள் தி.மு.கவுக்கு ஓட்டுப்போட தயங்குகிறார்கள்”  என்றார்கள்  கட்சி சீனியர்கள்.

மேலும் அவர்கள், “தேர்தல் அரசியலில் சாதி விசயத்தில் நுணுக்கமாக செயல்பட வேண்டும். 2001ம் ஆண்டு, வெளிப்படையாக ஸ்டாலின் அமைத்தது போல சாதிக்கூட்டணி வைத்தாலும் ஆபத்துதான். அதே நேரம் சாதிக்கணக்கை பார்க்காமல் விட்டாலும் ஆபத்துதான்.

உதாரணமாக…  காவிரி படுகை மாவட்டங்களில்  முத்திரையர் இனத்தவர்கள் கணிசமானவர்கள் வசிக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் தி.மு.க. ஆதரவு நிலைபாடு கொண்டவர்கள்தான்.

ஆனால் அந்த இனத்தைச் சேர்ந்த செல்வராஜை தொடர்ந்து புறக்கணித்தார் ஸ்டாலின்.  திருச்சி பகுதியில் நேருவை மட்டுமே தனது ஆளாக நினைத்தார் ஸ்டாலின். தொடர் புறக்கணிப்பு காரணமாக அ.தி.முக.வுக்கு சென்றுவிட்டார் செல்வராஜ். ஆகவே இந்தத் தேர்தலில் முத்திரையர்களின் ஆதரவை இழந்தது தி.மு.க.

யாதவர் இனத்தைச் சேர்ந்த தகுதியான பலர் தி.மு.க.வில் உண்டு அவர்களுக்கு இந்தத் தேர்திலில் சீட் தரவில்லை ஸ்டாலின்.

கருணாநிதி - மு.க. ஸ்டாலின்
கருணாநிதி – மு.க. ஸ்டாலின்

அது மட்டுமல்ல..  திருநெல்வேலி துத்தூக்குடி, கோவில்பட்டி, சிவகாசி, சங்கரன்கோயில், தேனி,  திண்டுக்கல், கோவை, ஒட்டன்சத்திரம், திருவண்ணாமலை. ஆரணி போன்ற பகுதிகளில் நாயுடு, நாயக்கர் இனத்தைச் சேர்ந்த மக்கள் கணிசமாக வாழ்கிறார்கள். அவர்களுக்கு உரிய முக்கியத்துவத்தை ஸ்டாலின் தரவில்லை.

ஏற்கெனவே முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமியை முற்றிலுமாக ஒதுக்கிவிட்டார்கள். இப்போது கட்சியில் ஆக்டிவாக இருக்கும் அதே இன பிரமுகர்களையும் ஒதுக்கி வைத்திருக்கிறார்கள்.

இதற்கு ஒரு உதாரணம் கே.எஸ். ராதாகிருஷ்ணன். ஈழத்தமிழர் விவகாரத்தில் தி.மு.க. மீது பழி சுமத்தப்பட்ட நேரத்தில் கேடயாக நின்று கட்சிக்கு அவப்பெயர் ஏற்படாதபடி காத்தவர் இவர்தான்.  ஸ்டாலினை ஜெனிவாக்கு அழைத்துச் சென்று ஈழத்தமிழர்க்காக மனு கொடுக்கச் செய்தார். ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கிலும் பெரும் பங்காற்றியவர் இவர்.

இவருக்கு இந்தத் தேர்தலில் சீட் கொடுத்திருந்தால் நாயுடு, நாயக்கர் இன மக்களுக்கு தி.மு.க. மீது பிடிப்பு ஏற்பட்டிருக்கும்” என்ற அவர்கள், “நமக்கு நாமே என்று ஒரு வருடமாக  தளபதி தமிழக்ததைச் சுற்றி வந்தாரே.. அதனால்தான் இந்த அளவுக்காவது வெற்றி கிடைத்தது என்று சிலர் பேசுகிறார்கள். உண்மையில், அந்த சுற்றுப்பயணத்தினால்தான் கட்சிக்கு வரும் ஓட்டுக்களே குறைந்தன” என்று கூறி அதிரவைத்தார்கள்.

அதற்கு அவர்கள் சொன்ன காரணம்:

“அந்த பயணத்திட்டத்தை திட்டமிட்டது தளபதியின் மருமகன் சபரீசன். அத் திட்டத்தை செயல்படுத்தியது  ஓ.எம்.ஜி. கம்பெனி.

அப்போது நடந்த கூத்துக்களுக்கு அளவே இல்லை. ஒரு ஊருக்கு ஸ்டாலின் வருகிறார் என்றால்  பத்து நாட்களுக்கு முன்பே, அன்பில் பொய்யாமாழி, ஓ.எம்.ஜி. நிறுவனத்தின் சுனில் ஆகியோர்  அந்த ஸ்பாட்டுக்கு சென்றுவிடுவார்கள்.

“அண்ணன் இந்த டீ கடையில தான் டீ குடிக்க போறார். அழுக்கில்லாம வச்சுக்கணும்” என்று அதட்டிவிட்டுப் போவார்கள்.

சொன்னபடி ஸ்டாலினும் அந்த ஸ்பாட்டுக்கு வருவார், அவருடன் லோக்கல் அதிகார மையங்கள்.. அதாவது மாவட்ட செயலாளர் போன்றவர்கள்தான் இருப்பார்கள்.

"நமக்கு நாமே" பயணத்தில் ஸ்டாலின்
“நமக்கு நாமே” பயணத்தில் ஸ்டாலின்

சபரீசன் கட்டளைப்படி, ஏற்கெனவே செட் அப் செய்து வைத்திருந்த ஒரு பாமரனுடன் அல்லது பாமர தோற்றத்தில் உள்ளவருடன் நின்று போஸ் கொடுப்பார் ஸ்டாலின். அவ்வளவுதான் கிளம்பி விடுவார்.

அந்த நிகழ்ச்சிக்கு பணம் செலவு செய்த கட்சிக்காரனை கண்டுகொள்ளவே மாட்டார். இதனால் கட்சிக்கார்களுக்கும் அவருக்குமான உறவு சிதைந்ததுதான் மிச்சம்.

இந்த நமக்கு நாமே பயணத்தால் சமூக இணையங்களில் கட்சியை பலரும் கிண்டலடித்து இமேஜை குறைத்ததுதான் நடந்தது.

ஆகவே இந்த நமக்கு நாமே பயணம் நடந்திருக்காவிட்டால் கூடுதல் இடங்கள் பெற்று தி.மு.க. இப்போது ஆட்சியைப் பிடித்திருக்கும்” என்றார்கள் அந்த சீனியர் உடன்பிறப்புகள்.

மேலும், “மக்களின் உணர்வு சம்பந்தப்பட்ட தேர்தலை, வெறும் நாடக பாணியில் கொண்டு சென்றதும் தி.மு.க.வின் தோல்விக்குக் காரணம். செயற்கையாக தளபதியை பேசவைத்து தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பினார்கள்.  இது மக்களிடம் எடுபடவில்லை.

அது மட்டுமல்ல.. அ.தி.மு.க.வுக்காக தேர்தல் விளம்பரத்தில் நடித்த கஸ்தூரி பாட்டி என்பவரையே தி.மு.க. தேர்தல் விளம்பரத்துக்கும் பயன்படுத்தினார்கள்.

இதெல்லாம் தி.மு.க. என்பது ஏதோ நாடக டீம் என்று மக்கள் நினைக்கும் அளவுக்கு ஆகிவிட்டது. இதற்கு சபரீசன் டீம்தான் காரணம்.

கருணாநிதி - ஸ்டாலின் - துர்கா - சபரீசன்
கருணாநிதி – ஸ்டாலின் – துர்கா – சபரீசன்

அது மட்டுமல்ல.. தேர்தல் கூட்டணியிலும் தளபதி பலவித குழப்பங்களை செய்தார். அவரது நடவடிக்கைகளால் காங்கிரஸுடனான கூட்டணி முறியும் நிலையும் ஏற்பட்டது. அக் கட்சிக்கு ஏன் இத்தனை சீட் என்று இவர் ஆடிய ஆட்டம்தான் அதற்குக் காரணம்.

நல்லவேளையாக கனிமொழியின் தலையீட்டால், காங்கிரஸ் கூட்டணி தொடர்ந்தது. அதே போல வேட்பாளர் தேர்விலும் ஸ்டாலின் வழக்கம்போல் கோட்டைவிட்டார் அதோடு சபரீசன் தலையீடு வேறு. மேலும் கட்சி பிரச்சாரத்தையும் வீச்சிழக்க வைத்துவிட்டார்கள்.

மொத்தத்தில் தலைவர் கலைஞரின் நேரடி பிடிமானம் இல்லாததாலேயே தி.மு.க.வுக்கு இந்தத் தோல்வி ஏற்பட்டது.

ஆகவேதான் சொல்கிறோம்…  முடிவெடுக்கும் அதிகாரத்திலிருந்து தளபதி விலக வேண்டும். தலைவர் சொல்படி அவர் செயல்பட்டாலே போதும்.  அதுதான் தி.மு.க.வின் எதிர்காலத்துக்கு நல்லது!” என்று முடித்தார்கள் அந்த சீனியர் உடன்பிறப்புகள்.

(தீவிர தி.மு.க. பற்றாளர்களின் குமுறல்கள் இன்னமும் நிறைய இருக்கின்றன.. இதன் அடுத்த பகுதி நாளை..)