கருணாநிதி சிலை திறப்பு விழா: ரஜினி, கமலுக்கு ஸ்டாலின் அழைப்பு

சென்னை:

திமுக முன்னாள்  தலைவரும், முன்னாள் தமிழக முதல்வருமான மறைந்த கருணாநிதியின் திருஉருவச் சிலை வரும 16ந்தேதி திமுக தலைமையகமான அண்ண அறிவாலயத்தில் திறக்கப்பட உள்ளது.

அகலி இந்திய காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் சோனியா காந்தி தலைமையில் சிலை திறப்பு விழா நடைபெற உள்ள நிலையில், சிலை திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்துகொள்ள நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன், நடிகர் ரஜினிகாந்த் உள்பட பலருக்கு  அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது.

மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் முழு உருவ சிலை அறிவாலய வளாகத்தில் அமைக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே இருந்த அண்ணா சிலை அகற்றப்பட்டு, அந்த இடம் சரி செய்யப்பட்டு,  அண்ணா, கருணாநிதி சிலைகளை ஒரே இடத்தில் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.‘

இந்த சிலை திறப்பு விழா அடுத்த வாரம் ஞாயிற்றுக்கிழமை (16ந்தேதி) நடைபெற உள்ளது.   காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி விழாவில் கலந்துகொண்டு கருணாநிதி சிலையை திறந்து வைக்கிறார். விழாவுக்கு அகில இந்திய அளவில் தலைவர்கள் அழைக்கப்படுகிறார்கள்.

ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, புதுவை முதல்-மந்திரி நாராயணசாமி, கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் உள்பட,  ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோருக்கும் அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது.

சிலை திறப்பு விழாவில் கலந்துகொண்டு சிலையை திறக்க கோரி, ஸ்டாலின் வரும் 9-ந் தேதி (ஞாயிறு) டில்லி சென்று சோனியா காந்தியை நேரில் சந்தித்து அழைப்பிதழ் வழங்க இருப்பதாக கூறப்படுகிறது.

ஐக்கிய முற்போக்கூட்டணி தலைவராக இருந்து வரும் சோனியா காந்தி, திமுக தலைவர் மறைந்த கருணாநிதியை  பெரிதும் மதிப்பிற்குரிய தலைவராக கருதியவர். தற்போது அவரது கையால் கருணாநிதி சிலை திறக்கப்பட உள்ளது.