கருணாநிதி சிலை திறப்பு விழா: சோனியாவுக்கு நேரில் அழைப்பு விடுக்க ஸ்டாலின் டில்லி பயணம்
சென்னை:
திமுக தலைவர் ஸ்டாலின், வரும் 16ந்தேதி நடைபெற உள்ள கருணாநிதி திருவுருவ சிலை திறப்பு விழாவில் கலந்துகொள்ள வலியுறுத்தி அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தியை நேரில் சென்று அழைப்பிதழ் கொடுத்து அழைப்பு விடுகிறார். இதற்காக அவர் வரும் 9-ந் தேதி (ஞாயிறுக்கிழமை) டில்லி செல்கிறார்.

திமுக முன்னாள் தலைவரும், முன்னாள் தமிழக முதல்வருமான மறைந்த கருணாநிதியின் திருஉருவச் சிலை திமுக தலைமையகமான அண்ண அறிவாலயத்தில் வரும 16ந்தேதி திறக்கப்பட உள்ளது. இந்த சிலை திறப்பு விழாவில் கலந்துகொள்வதாக ஏற்கனவே சோனியா காந்தி ஒப்புதல் அளித்துள்ளார்.
இந்த நிலையில், மரியாதை நிமித்தமாக சோனியா காந்தியை நேரில் சென்று அழைக்க திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்துள்ளார். அதன் காரணமாக வரும் 11ந்தேதி அவர் டில்லி பயணமாகிறார்.
டில்லியில், அகில இந்திய காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து, விழாவுக்கான அழைப்பிதழ் கொடுத்து, விழாவை தலைமையேற்று நடத்தித்தர அழைப்பு விடுக்கிறார்.
மேலும் பல வட மாநில அரசியல் கட்சி தலைவர்களுக்கும் ஸ்டாலின் நேரில் அழைப்பிதழ் வழங்க முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஏற்கனவே ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, புதுவை முதல்-மந்திரி நாராயணசாமி, கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் தமிழகத்தில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோருக்கும் அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.