திமுக தலைவர் கருணாநிதியின் சட்டப்பேரவை பணி 60ஆண்டு நிறைவு வைரவிழா மற்றும் 94-வது பிறந்த நாள் விழா சென்னையில் இன்று மாலை நடைபெறுகிறது.

ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. திடலில் மாலை 5 மணிக்கு நடைபெறும் விழாவில், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் துணைத் தலைவர் ராகுல்காந்தி பங்கேற்க உள்ளார்

இதற்காக தனி விமானம் மூலம் சென்னை வரும் ராகுல்காந்தி, ஆழ்வார்பேட்டை செனடாப் சாலையில் உள்ள மு.க.ஸ்டாலின் இல்லத்துக்குச் செல்கிறார். அங்கிருந்து விழா மேடைக்கு வர உள்ளார்.

மார்க்சிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, பீகார் மாநில முதல்வர் நிதீஷ்குமார், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா உள்ளிட்ட வடமாநில தலைவர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்க இருப்பதாக தகவல்கள் வந்துள்ளது.

உடல்நிலை சரியில்லாத காரணத்தால், லல்லுபிரசாத் யாதவ் பங்கேற்கவில்லை என்றும், வாழ்த்து செய்தி அனுப்பி உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

கருணாநிதிக்கு வாழ்த்து:

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி ஏற்கனவே வாழ்த்து கூறி கடிதம் அனுப்பியிருந்தார்.

கேரள முதல்வர் பினராயி விஜயன் கருணாநிதிக்கு வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளார்.

அதில், கருணாநிதியின் 94-ஆவது பிறந்த நாளுக்கு வாழ்த்துத் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். அவரின் பணிகள் பல ஆண்டுகளுக்குத் தொடர வேண்டும் என்றார்.

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி நேற்றே தனது வாழ்த்து செய்தியை புதுவை சட்டபேரவையில் பதிவு செய்தார்.

ஏற்கனவே தமிழகத்தை சேர்ந்த மத்தியஅமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கருணாநிதிக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தமிழக பாரதியஜனதா தலைவர் தமிழிசையும் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதில், எத்தனை நூறாண்டுகள் ஆனாலும் தமிழக அரசியல் வரலாற்றில் கருணாநிதியின் பெயர் ஒலிக்காத பகுதி இருக்க முடியாது. எத்தனை அரசியல் சூழ்நிலைகளையும் சமாளிக்கக் கூடியவர்.
பல அரசியல் சூழ்ச்சிகளையும் கடந்து வந்தவர். இன்றைய சூழ்நிலையில் அவர் முழு உடல் நலம் பெற்று நீடுழி வாழ வேண்டும் என்று தனது வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.

கேரள ஆளுநர் பி. சதாசிவம் கருணாநிதிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்

கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி அவரது  இல்லத்தில் அவரது மகனும், திமுக செயல் தலைவருமான மு .க.ஸ்டாலின் குடும்பத்தினர், ராசாத்தி அம்மாள்,  கனிமொழி , கருணாநிதியின் மூத்த மகள் செல்வி உள்பட அவரது குடும்பத்தினர்  சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

திமுகவினர் யாரும் கருணாநிதியைச் சந்திக்க வரவேண்டாம் என்று திமுக தலைமை ஏற்கெனவே அறிவித்துள்ளது.