ஜூன் 3ந்தேதி: திமுக சார்பில் கருணாநிதியின் பிறந்த நாள் பொதுக்கூட்டம்

சென்னை:

திமுக சார்பில் கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன் 3ந்தேதி மாபெரும்  பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில் கூட்டணி கட்சியினரும் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

முன்னாள் திமுக தலைவர் கருணாநிதியின்  பிறந்தநாள் வரும் ஜுன் 3ம் தேதி கொண்டாடப்படுகிறது. அவரது மறைவுக்கு பிறகு வரும்  முதல் பிறந்தநாள் என்பதால், அவரை நினைவு கூறும் விதமாக சென்னையில் மாபெரும் பொதுக்கூட்டத்துக்கு திமுக திட்டமிட்டுள்ளது.

அதன்படி திமுக சார்பில்  சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் ஜூன் 3ம் தேதி மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பொதுக்கூட்டத்துடன் மக்களவை தேர்தலில் மகத்தான வெற்றியை அளித்த தமிழக மக்களுக்கு நன்றி கூறும் விதமாகவும் இந்த கூட்டம் நடைபெறும் எனவும் திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கூட்டத்திற்கு தோழமைக் கட்சித்தலைவர்கள் அனைவரும் அழைக்கப்படவுள்ளனர்.

இதனிடையே வரும் 25ம் தேதி சனிக்கிழமை மாலை, திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர்களின் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.