கருணாநிதியின் உடல் நிலை: ஸ்டாலினிடம் ராகுல்காந்தி நலம் விசாரிப்பு

சென்னை:

திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நிலை குறித்து திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலினிடம் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி நலம் விசாரித்தார்.

தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவு காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி கோபாலபுரம் இல்லத்தில் ஓய்வெடுத்து வருகிறார். சமீபத்தில் அவரது கழுத்தில் பொருத்தப்பட்டிருந்த உணவுக்குழாய் மாற்றப்பட்டது. அதன்பிறகு அவருக்கு தொற்று ஏற்பட்டு காய்ச்சல் நீடித்து வருகிறது. அவருக்கு ஏற்கனவே சிகிச்சை அளித்து வரும் காவேரி மருத்துவமனை மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

கடந்த 2017ம் ஆண்டு கருணாநிதியின் 94வது பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்ட ராகுல்காந்தி கருணாநிதியை சந்தித்தபோது எடுத்த படம்

இந்த நிலையில் கருணாநிதியின் உடல்நிலை குறித்து அரசியல் கட்சி தலைவர்கள் நலம் விசாரித்து வருகின்றனர். ஏற்கனவே குடியரசு தலைவர் ராம்நாத், பிரதமர் மோடி மற்றும் தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கருணாநிதி விரைவில் நலம்பெற வேண்டும் என்று வாழ்த்துவதாக கூறி உள்ளனர்.

இந்த நிலையில், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலினிடம் போன் மூலம் தொடர்பு கொண்டு கருணாநிதியின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார். அப்போது, கருணாநிதி விரைவில் பூரண குணமடைய இறைவனை பிரார்த்திப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த நிலையில், தி.மு.க தலைவர் கருணாநிதியின் உடல் நிலை தேறி வருவதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.