கருணாநிதியின் உடல் நிலை: ஸ்டாலின், கனிமொழியிடம் பிரதமர் மோடி நலம் விசாரிப்பு

சென்னை:

திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நிலை குறித்து திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், திமுக எம்.பி. கனிமொழியிடம் பிரதமர் மோடி நலம் விசாரித்தார். அதை அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவு காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி, கோபாலபுரம் இல்லத்தில் ஓய்வெடுத்து வருகிறார். சமீபத்தில் அவரது கழுத்தில் பொருத்தப்பட்டிருந்த உணவுக்குழாய் மாற்றப்பட்டது. அதன்பிறகு அவருக்கு தொற்று ஏற்பட்டு காய்ச்சல் நீடித்து வருகிறது.

இதன் காரணமாக காவேரி மருத்துவமனை மருத்துவர்கள் அவருக்கு  தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். அவரது உடல்நிலை மோசமடைந்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், கருணாநிதியின் உடல்நிலை குறித்து அறிய அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் கோபாலபுரம் நோக்கி படையெடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில், தி.மு.க தலைவர் கருணாநிதியின் உடல் நிலை குறித்து மு.க.ஸ்டாலினிடமும், திமுக எம்.பி. கனிமொழியிடமும் பிரதமர் மோடி நலம் விசாரித்தார்.அப்போது, கருணாநிதியின்  சிகிச்சைக்கு தேவைப்படும் உதவிகளை அளிக்கத் தயார் என்றும் உறுதி அளித்துள்ளார்.

இந்த தகவலை மோடி தனது டுவிட்டர் பக்கத்திலும் தெரிவித்து உள்ளார். அதில்,  திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து ஸ்டாலின், கனிமொழியிடம் தொடர்பு கொண்டு பேசினேன். தேவையான உதவிகளை செய்ய தயாராக இருக்கிறேன். திமுக தலைவர் கருணாநிதி விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.