கருணாநிதி உடல்நிலை சீராக உள்ளது: காவேரி மருத்துவமனை வளாகத்தில் முதல்வர் தகவல்

சென்னை:

காவேரி மருத்துவமனையில் இன்று 3வது நாளாக தீவிர சிகிச்சை பெற்று வரும் திமுக தலைவர் கருணாநிதியை இன்று காலை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணைமுதல்வர் ஓபிஎஸ் உள்பட மூத்த அமைச்சர்கள் நேரில் சென்று நலம் விசாரித்தனர்.

அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி,  திமுக தலைவர் கருணா நிதியை நானும், துணை முதலமைச்சர் பன்னீர்செல்வமும் நேரில் சென்று பார்த்தோம். அவரின் உடல்நிலை சீராக உள்ளது  என்று தெரிவித்தார்.

கடந்த 2 ஆண்டுகளாக வயது முதிர்வு காரணமாக வீட்டில் இருந்தே சிகிச்சை மேற்கொண்டு வரும் திமுக தலைவர் கருணாநிதிக்கு கடந்த  27ந்தேதி இரவு ரத்த அழுத்தக் குறைவு ஏற்பட்ட தால் நள்ளிரவு 1.30 மணிக்கு  காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

காவேரி மருத்துவமனையில் மு.க.ஸ்டாலினிடம் கருணாநிதி குறித்து விசாரிக்கும் முதல்வர் எடப்பாடி , துணைமுதல்வர் ஓபிஎஸ் மற்றும் அமைச்சர்கள்

இன்று 3வது நாளாக தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கிடையில் அவரது உடல் நிலை குறித்து வதந்திகள் பரவியதால், திமுக தொண்டர்கள் ஆயிரக்கணக்கில் காவேரி மருத்துவமனை பகுதியில் திரண்டனர். இதன் காரணமாக பல இடங்களில் போக்கு பாதிக்கப்பட்டது.

இதன் காரணமாக தமிழகம் முழுவதும் அசம்பாவிதங்கள் நடைபெறாதாவது காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

கருணாதியின் உடல்நிலை குறித்து விசாரிப்பதற்காக தமிழக தலைவர்கள் மட்டுமல்லாத வட இந்திய தலைவர்களும் நேரில் வந்து விசாரித்து செல்கின்றனர்.

இந்த நிலையில், திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து அறிய சென்னை காவேரி மருத்துவமனைக்கு முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர் கள் சி.வி. சண்முகம், விஜயபாஸ்கர், செங்கோட்டையன், காமராஜ் உள்பட பலர்  வருகை தந்தனர்.

அங்கு திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட கருணாநிதி குடும்பத்தினரிடம் கருணா நிதியின் உடல்நிலை குறித்து விசாரித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி,  திமுக தலைவர் கருணாநிதியை நானும், துணை முதலமைச்சர் பன்னீர் செல்வமும்  நேரடியாக பார்த்தோம். அவரின் உடல்நிலை சீராக உள்ளது. அவரின் உடல்நிலையை தொடர்ந்து மருத்துவர் குழு கண்காணித்து வருகிறது என  கூறினார்.

ஏற்கனவே கடந்த  26ம் தேதி துணை முதல்வர் பன்னீர்செல்வம் உள்பட மூத்த அமைச்சர்கள் சிலர் கருணாநிதியின்  கோபாலபுரம் இல்லத்திற்கு சென்று கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரித்து குறிப்பிடத்தக்கது.