சென்னை: சென்னை தேனாம்பேட்டை மெட்ரோ ரயில் நிலையத்துக்கு மறைந்த திமுக தலைவர் கருணாநிதி பெயர் சூட்ட உத்தரவிடக்கோரிதொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதி மன்றம், வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

சென்னையில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு அதிமுக தலைவர்களின் பெயரை தமிழகஅரசு சூட்டி வருகிறது. இதனால், தேனாம்பேட்டை மெட்ரோ ரயில் நிலையத்துக்கு கருணாநிதி பெயரை சூட்ட வேண்டும் என திமுக தரப்பில் கோரிக்கை எழுந்தது.

ஏற்கனவே சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ என்றும் ஆலந்தூர் மெட்ரோ என்பது அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ என்றும் புறநகர் பேருந்து நிலையம் மெட்ரோ என்பதை புரட்சித்தலைவி ஜெயலலிதா புறநகர் பேருந்து நிலையம் மெட்ரோ என்றும் பெயர் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

இதையடுத்து, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் மெட்ரோ ரயில் நிலையத்துக்கு கருணாநிதி பெயர் சூட்டக் கோரி  கலைஞர் தமிழ் பேரவையின் செயலாளர் ராதாகிருஷ்ணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் “டி.எம்.எஸ் மெட்ரோ ரயில் நிலையத்துக்கு கலைஞர் பெயர் சூட்டுவது பற்றி தமிழக அரசுதான் முடிவெடுக்க வேண்டும்” என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்வதாக அறிவித்தது.