கலைஞரின் பொது விநியோக திட்டம்  – சமூக நீதியா அல்லது வறுமை ஒழிப்பா ?- ஒரு அலசல்…

சிறப்புக்கட்டுரை: எழுத்தாளர் ராஜ்குமார் மாதவன்

1971ம் ஆண்டிலே தமிழகத்தில் ஆட்சிக்கு வந்த கலைஞர் 1972 -ம் ஆண்டு தமிழ் நாடு நுகர் பொருள் வாணிப கழகம் துவக்கினார். அந்நிறுவனத்தின் குறிக்கோள் :

1 . விவசாயிகளிடம் இருந்து நேரடியாக விவசாய உணவு பொருள் கொள்முதல் செய்வது.

2 . வாங்கப்பட்ட விவசாய பொருட்களை தமிழ் நாடு அரசு கிடங்குகளில் சேமித்துவைப்பது.

3 . விவசாய உணவு பொருட்களை ஆண்டு  முழுவதும் நேரடியாகவோ அல்லது  தமிழ் நாடு நுகர்வோர் கூட்டுறவு சங்கங்களின் வாயிலாக மக்களுக்கு விநியோகிப்பது.

இந்த நுகர்பொருள் வாணிப கழகம், சமுதாயத்தில் ஏற்படுத்திய தாக்கம் நம்மில் பலரும் அறியக்கூடியதில்லை. இந்த நிறுவனம் அமைவதற்கு முன்னாள், ஊருக்கு ஒரு களஞ்சியம் இருக்கும். அங்கு தான் ஏழை விவசாயின் பொருட்கள் சேமிக்கப்படும். அங்கு சேமிப்பதற்கு, ஒருவருடைய சாதி, சமய, பொருளாதார மற்றும் ஆளுமைகள் பொறுத்து அமையும்.

மனிதர்கள் வசிக்கவே சரியான வீடுகளே அற்ற சமுதாயத்தில், ஏழை விவசாயி தான் உற்பத்தி செய்த தானியங்களை எங்கே சேமிப்பது? உற்பத்தியான அனைத்து தானியங்களும் ஒரே தருவாயில் சந்தைக்கு வரும்பொழுது, பொருளுக்கான விலையும் கிடைக்கவில்லை. மேலும் இருக்கும் பொருளை விற்றுவிட்ட விவசாயி, ஆண்டு முழுவதும் தனக்கான தேவைக்கு ஊரில் உள்ள அம்பலார்களையும், மிட்டா மிராசுதாரர்களையும் சார்ந்தே இருக்கவேண்டியதாயிற்று.

இது கிராமங்களில் குறிப்பிட்ட சில சமூகங்களை ஆதிக்கம் செலுத்த செய்தது. மற்றைய கிராமத்தார்,  பசி பிணி போக்க இந்த ஆதிக்க சக்திகளை சார்ந்தே இருக்க வேண்டியதாயிற்று.

1972ம் ஆண்டு  தமிழ் நாடு நுகர் பொருள் வாணிப கழகம் தொடங்கப்பட்டதற்கு பிறகு, அனைத்து தரப்பு விவசாயிகளும் தங்கள் உற்பத்தியை நேரடியாக அரசிடம் விற்க முடிந்தது. அதற்குரிய அரசு நிர்ணயித்த விலையும் கிடைத்தது.

அந்த வாணிபத்தில், எந்த மேற்குடியின் ஆதிக்கமும் நீடிக்கவில்லை. இது மெல்ல, கிராமங்களில் இருந்த ஆதிக்க சக்திகளின் பிடியில் இருந்து ஏழை எளிய மக்களை மீட்டது. மேலும் அதே மக்கள், விவசாயம் அற்ற பொழுதுகளில், ஆதிக்க குடிகளின் வீட்டு வாயில்களில் தவமாய் இருந்து வயிற்வளர்த்த நிலையை மாற்ற தமிழ் நாடு நுகர்வோர் கூட்டுறவு சங்கங்களின் வாயிலாக கிடைக்க பெற்ற உணவு வகைகள் உத்தரவாதம் செய்தது.

அது காலம் வரை இருந்து வந்த சமுதாய அடுக்குமுறைகள் மெல்ல தகர்ந்து, யாருக்கும் யார் அடிமை இல்லை என்பதை உத்தரவாதம் செய்தது.

தமிழ் நாடு நுகர்வோர் கூட்டுறவு சங்க கடைகளில், சாதி, மத, பொருளாதார பேதங்கள் அற்று அனைவரும் வரிசையில் நின்று பொருட்கள் பெறும்போது ஜனநாயகம் போற்றும் சமதர்மம் நிலைபெற்றது.

கிராமங்களில் அம்பலகாரர், மிட்டா மிராசுகளின் ஆதிக்கம் மெல்ல சரிய தொடங்கி, குடி மக்களின் உரிமைகள் நிலை நாட்ட பெற்றது. தான் உற்பத்தி செய்த பொருளை விற்பதற்காகவும், உணவுக்காகவும், வேலைக்காகவும் கிராமங்களில் இருந்த மேலாதிக்க சக்திகளின் பிடியில் இருந்த ஏழை மக்களை மீட்டது, தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழகம் என்றால் அது மிகையாகாது.

காலங்கள் கடந்து இன்று பின்னோக்கி பார்ப்போமானால், கலைஞரின் பொது விநியோக திட்டம்  வழங்கியது சமூக நீதியா அல்லது வறுமை ஒழிப்பா ? என்ற கேள்வி தொக்கி நிற்கும்.

கலைஞரின் நுகர் பொருள் வாணிப கழகமும், நுகர்வோர் கூட்டுறவு சங்கங்களும் வறுமை ஒழிப்போடு சமூக நீதியையும் நிலைநாட்டியது  என்றால் அது மிகையாகாது. அதை விட பெரிய மாற்றத்திற்கு, இத்திட்டங்கள் வித்திட்டது. பசி ஆறிய வயிறு கல்வி கூடங்களை தேடி போயின . தமிழர்களை  உணவு தேடலில் இருந்து மீட்டு கல்வித்தேடலில் 1972 -ம் ஆண்டுக்கு பின்னாக நகர்த்தி, இன்று ஆரம்பக்கல்வியில் நாடு போற்றும் மாநிலமாக வளர்ந்திருக்கிறோம் என்றால், விதை கலைஞர் இட்டது.