கருணாநிதி வேட்டியை உருவிவிடவா போகிறோம்? :அதிமுக நிர்மலா பெரியசாமி அதிர்ச்சி பேச்சு

“தி.மு.க. தலைவர் கருணாநிதி சட்டசபைக்கு வந்தால், அவரது வேட்டியை உருவிவிடவா போகிறோம்” என்று அ.தி.மு.க.வின் தலைமைக்கழக பேச்சாளர் நிர்மலா பெரியசாமி பேசியது அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

“சட்டமன்ற கூட்டத்தொடரில் தி.மு.க. தலைவர் கருணாநிதி கலந்துகொள்ள வேண்டும் என்றால், சக்கர நாற்காலியுடன் அவர் அமர வசதி செய்து தரவேண்டும்” என்று தி.மு.க. சார்பில் சபாநாயகர் தனபாலிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.

download (1)

இதையடுத்து, “தி.மு.க.வினர் கோரியபடி வசதி செய்து தரப்பட்டுள்ளது” என்று அ.தி.மு.க சார்பில் சொல்லப்படுகிறது. தி.மு.க. தரப்பிலோ, “கருணாநிதியின் சக்கர நாற்காலி சென்று வரும் அளவுக்கு வசதி செய்து தரப்படவில்லை” என்று கூறப்படுகிறது.

இதையடுத்து சட்டமன்றத் தொடரில் கருணாநிதி கலந்துகொள்ளவில்லை. இந்த நிலையில் புதிய தலைமுறை தொலைக்காட்சியில் இது தொடர்பாக விவாதம் இன்று நடந்தது. இதில் அ.தி.மு.க சார்பாக அக் கட்சியின் தலைமைக் கழக பேச்சாளரும், தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளருமான நிர்மலா பெரியசாமி கலந்துகொண்டார்.

அப்போது அவர், “தி.மு.க. தலைவர் கருணாநிதி சட்டசபைக்கு வந்தால், அவரது வேட்டியை உருவிவிடவா போகிறோம்” என்று அதிர்ச்சி அளிக்கும் விதத்தில் பேசினார்.

இவரது பேச்சு, அரசியல் மட்டத்தில் மட்டுமின்றி, நேயர்கள் மத்தியிலும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி இருக்கிறது.

“கருணாநிதி மீது பல்வேறு விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால் மூத்த அரசியல்தலவரான அவரை, நடக்க முடியாத நிலையில் சக்கர நாற்காலியில் நடமாடும் முதியவரை இப்படி பேசுவது கண்டிக்கத்தக்கது” என்று நடுநிலையார்கள் தெரிவிக்கிறார்கள்.