பாஜகவுடன் நெருங்கிய நட்பு கொண்டிருந்தவர் கருணாநிதி: பா.ஜ.க. அமைச்சர் நிதின் கட்கரி

“கருணாநிதி தேசத்தின் தலைவர்” என்று பா.ஜ.கவின் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதி கடந்த ஆகஸ்ட் 7ம் தேதி இயற்கை எய்தினார். இந்த நிலையில் அவருக்கு நினைவேந்தல் இன்று சென்னை ஒய்.எம்.சி.ஏ. திடலில் நடத்தப்படுகிறது. இதில்   முன்னாள் பிரதமர் தேவ கவுடா, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான குலாம் நபி ஆசாத்,  புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, சீதாராம் யெச்சூரி, பிரஃபுல் பட்டேல், ஃபரூக் அப்துல்லா உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் கலந்துகொண்டிருக்கிறார்கள்.

இதில் கலந்து கொண்டு பேசிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி,   “நெருக்கடி நிலையை துணிந்து எதிர்த்தவர் கருணாநிதி.  அந்த காலகட்டத்தில் ஜனநாயகத்தை காப்பதில் இந்திய அளவில் பங்களிப்பை வழங்கியவர். நெருக்கடி நிலையை பாஜகவும், கருணாநிதியும்தான் முதலில் எதிர்த்தோம். இதனால் கருணாநிதியும் திமுகவினரும் கொடுமைப்படுத்தப்பட்டனர்.

பாஜகவுடன் நெருங்கிய நட்பு கொண்டிருந்தவர் கருணாநிதி. திமுக கொள்கைக்கு மாறான கட்சிகளுடனும் நட்பு கொண்டிருந்தார். மத்தியில் கூட்டணி ஆட்சியை அமைப்பதில் கருணாநிதி முன்னோடியாக திகழ்ந்தார்.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இரங்கல் தெரிவிக்கப்பட்ட வரலாறு கருணாநிதிக்கு உண்டு.  நாள் ஒன்றுக்கு 20 மணி நேரம் உழைக்கக்கூடிய கடும் உழைப்பாளியாக திகழ்ந்தார். கருணாநிதியை ஒரு மாநில தலைவராக மட்டும் கருதுவது சரியாக இருக்காது. அவர் தேசிய தலைவர்களில் ஒருவர்.

அவர் சிறந்த தோழமைக் கட்சி தலைவர். 1999ம் வருடம்  அமைந்த வாஜ்பாய் தலைமையிலான மத்திய ஆட்சியில் சிறந்த தோழமை கட்சித் தலைவராக திகழ்ந்தார். அவருடன்  கலைஞருடன் இணைந்து டெசோ மாநாட்டில் 1986ம் ஆண்டு மதுரையில் வாஜ்பாய் பங்கேற்றார்” என்று நிதின் கட்காரி பேசினார்.