தனுஷின் ‘கர்ணன்’ படத்தைத் தடை செய்ய கோரும் தமிழ்நாடு முக்குலத்தோர் புலிப்படை…!

‘பட்டாஸ்’ படத்தை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் ‘கர்ணன்’ படத்தில் நடிக்கிறார் தனுஷ்.

ரஜிஷா விஜயன் நாயகியாக நடிக்கவுள்ள இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார் .இவர்களுடன் இப்படத்தில் லால், யோகி பாபு , லட்சுமி பிரியா , கெளரி கிஷன் இணைந்துள்ளனர் .

வி.கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். படத்தின் படப்பிடிப்பு துவங்கியிருக்கும் இந்நிலையில், ‘கர்ணன்’ என்ற தலைப்பை மாற்றக் கோரி சிவாஜி சமூகநலப் பேரவையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் இந்தப் படத்துக்கு கருணாஸ் நடத்தி வரும் தமிழ்நாடு முக்குலத்தோர் புலிப்படை எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்தக் கட்சியினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

1991-ல் கொடியன்குளம் மணியாச்சி சாதி கலவரத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வரும் ‘கர்ணன்’ படத்தைத் தடை செய்ய வேண்டும் மற்றும் அந்த படப்பிடிப்பை திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தில் எடுப்பதற்குத் தடை விதிக்க வேண்டும். தென் மாவட்டங்களில் அமைதி சூழ்நிலை நிலவி வருகின்ற நிலையில் இது போன்ற திரைப்படங்களால் மீண்டும் ஒரு கலவர சூழ்நிலை ஏற்படுகிறது.

ஆகையால் இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் மற்றும் அந்த திரைப்படத்தில் மணியாச்சி காவல்நிலையம் என்று பெயரிட்டு அந்த காவல் நிலையத்தை தனுஷ் தாக்குவது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருக்கிறது. இது காவல்துறை கண்ணியத்தையும் கெடுப்பதாக அமைகிறது. குறிப்பாக அந்த திரைப்படத்தில் தேவர் சமூகத்தை மிகவும் விமர்சித்து வருகிற மாதிரி காட்சிகள் இடம்பெறுகிறது. தொடர்ந்து இது போன்ற திரைப்படங்கள் எடுத்து இரு சமூக மக்களிடையே சாதி கலவரத்தைத் தூண்டி வருகிற மாரி செல்வராஜை கைது செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்

இவ்வாறு தமிழ்நாடு முக்குலத்தோர் புலிப்படை தெரிவித்துள்ளது.