சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பல்வேறு அதிரடி அரசியல் மாற்றங்களும் நிகழ்ந்து வருகின்றன. இந்த நிலையில்,  அதிமுக கூட்டணியில் இருந்து, கருணாஸ், தமிமுன்அன்சாரி, தணியரசு ஆகியோர், அங்கிருந்து விலகி திமுகவுக்கு ஆதரவு தெரிவித்து உள்ளனர். இதுதொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளனர்.

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ந்தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, திமுக, அதிமுக தலைமையிலான கூட்டணியில், தோழமை கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. திமுக கூட்டணியில், காங்கிரஸ், மனித நேய மக்கள் கட்சி, முஸ்லீம் லீக், மதிமுக, விசிக, கம்யூனிஸ்ட், மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் இடம்பெற்றுள்ளன அத்துடன் தி.மு.க-தமிழக வாழ்வுரிமை கட்சி இன்று தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில்,  திமுக கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக கருணாஸ், தணியரசு,  தமிமுன் அன்சாரி ஆதரவு தெரிவித்துள்ளனர்.

மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் திமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக, அதன் தலைவர் தமிமுன் அன்சாரி திமுக தலைவரிடம் கடிதம் வழங்கி உள்ளார்.அவருக்கு ஒரு தொகுதி கேட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதுபோல, கருணாஸின் முக்குலத்தோர் புலிப்படை கட்சி ஆதரவு அளித்துள்ளது. இவர் எத்தனை தொகுதி கேட்டுள்ளார் என்பது குறித்து தகவல் வெளியாகவில்லை. கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தணியரசும் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இவர் எத்தனை தொகுதி கேட்டுள்ளார் என்பது தெரியவில்லை.

கடந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் மூம்மூர்த்திகளாக விளங்கிய, முக்குலத்தோர் புலிப்படை கட்சி கருணாஸ், மனிதநேய ஜனநாயக கட்சி தமிமுன் அன்சாரி, கொங்கு இளைஞர் பேரணை தணியாரசு ஆகியோர்,  இந்த முறை திமுக பக்கம் சாய்ந்துள்ளன. இது அதிமுகவுக்கு இழப்பை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது.

ஏற்கனவே கருணாஸ், தனியரசு,  அன்சாரி ஆகிய மூவரும் பாரதிய ஜனதா கூட்டணியை எதிர்த்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

எடப்பாடி அரசை மிரட்டும் மும்மூர்த்தி எம்எல்ஏக்கள்…. தமிழகத்தில் அரசியல் பரபரப்பு