Random image

ஐபிஎஸ் அதிகாரிக்கு கருணாஸ் பகிரங்க மிரட்டல்

ஐபிஎஸ் அதிகாரிக்கு கருணாஸ் பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

காவல்துறையையும், நீதித்துறையையும் கடுமையாக விமர்சித்த எச்.ராஜா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ், ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளார். கடந்த 16-ம் தேதி வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டத்தில் பேசிய அவர், “என் போராட்டத்திற்கு இங்கு வந்துள்ள வாகனங்கள் எண்ணிக்கை ஐம்பது. அந்த அளவுக்கு என் மீது பற்றுக்கொண்ட என் ஆட்கள் இங்கு வந்திருக்கிறார்கள்.  அதற்காக ஒட்டுமொத்த முக்குலத்தோருக்கும் தலைவன் என்று சொல்லிக்கொள்ள மாட்டேன்.

குறுகிய நேரத்தில் இவ்வளவு இளைஞர்களை திரட்டிய இயக்கம் எனது இயக்கம். எனக்கு தனிப்பட்ட முறையில் காவல்துறை மீது மரியாதை இருக்கிறது. அவர்கள் சந்திக்கும் பிரச்சினை குறித்து எனக்கு தெரியும். இங்கே பிரச்சினை என்னவென்றால் ஒரு தனி நபர், ஐபிஎஸ் அரவிந்த். அவரிடம் நாங்கள் பொறுமையாகப் போக காரணம் தமிழ் படித்த ஐபிஎஸ் என்கிற மரியாதைதான்.

மற்றபடி ஜாதி அது எல்லாம் கிடையாது. எங்களிடம் அதை எதிர்ப்பார்க்காதே. எங்களுக்கு அதுப்பற்றி எல்லாம் கவலையே இல்லை. பொறுத்தார் பூமியாள்வார் என்று பொறுமையாக இருக்கிறோம். இங்குள்ள ஜேசி அன்பு அவருக்கு இருக்கும் பண்பு உங்களுக்கு ஏன் இல்லை.

சாமி, சிங்கம் என்று திரைப்படங்களைப் பார்த்துவிட்டு அதுபோல நடந்துகொள்கிறாய். கூலிங்கிளாஸ் போட்டு பத்து பேரை வைத்து சுற்றினால் மனதில் ஜமீன்தார் என்று நினைப்பா? உங்களைப்போல நானும் பப்ளிக் சர்வண்ட் தான். தேர்தலில் நின்று பார்.. 3 லட்சம் பேரிடம் ஓட்டு கேட்டு ஜெயித்துப்பார்.

சின்னப்பையன் வயசு கம்மி, தமிழ் ஆளு. நீ நல்லா வரணும்னு நாங்க நினைக்கிறோம். ஆனா நீ இவனுங்கள கத்தியை காட்டி காசு வாங்கினான்னு சொல்கிறாய். ஒரு நாள் சரக்குக்கே நாங்க ஒரு லட்சம் செலவு செய்கிறவர்கள். வர்றவன் போறவனுக்கு பிரியாணி ஆக்கிப்போடவே நாங்க அவ்வளவு செலவு செய்கிறோம்.

வரலாறு எனக்கு பேசத் தெரியும். சட்டமன்றத்திலேயே பேசினவன் தான் நான். இந்த கருணாஸ் இல்லாம, சின்னம்மா இல்லாமத்தான் இந்த அரசு உருவானதா? எங்க ஆளு வழக்கறிஞர். சட்டம் படித்தவன். அவனை கட்டப்பஞ்சாயத்து செய்கிறான்னு சொல்கிறீர்கள்.

ஒருத்தனை பிடித்தால் அவனை கையைக்காலை ஒடி என்று டிசி வடபழனி ஏசியிடம் சொல்கிறார். நான் இப்போது சொல்கிறேன் எங்க ஆளுங்க மேல கைய உடைக்கிறேன் காலை ஒடிக்கிறேன்னு வேலை வைத்தால் அவன் காலை உடைக்கணும்.  எது வந்தாலும்பார்த்துக்கொள்ளலாம்.

என்ன மானங்கெட்டுப்போய் வாழணுமா?

உங்கள் மீது மரியாதை இருக்கு. உங்களுக்கு அதிகாரம் இருக்கு. ஒரு அதிகாரி தவறு செய்தால் உயர் அதிகாரிகள் கூப்பிட்டு நடவடிக்கை எடுக்கணும். ஆனால் ஏன் அனைவரும் ஒத்து போகிறீர்கள்.

அந்த அதிகாரி செய்த செயலுக்கு அவருக்கு பதவி போயிருக்கும், நான் நினைத்திருந்தால் யூனிபார்மை கழற்றியிருப்பேன். ஒரு ஐபிஎஸ் செய்யாத செயலை செய்தவர் இந்த அரவிந்த்.  ஒரு தமிழ்ப்படித்த அதிகாரி என்பதால் விட்டேன்.

ஒரு அதிகாரி செய்கிற தவறுக்கு எப்படி ஒட்டுமொத்த காவல்துறையும் பொறுப்பாகும். எனக்கு அரவிந்த் டிசி மீது நடவடிக்கை எடுக்கணும். அதுவும் உடனடியாக எடுக்கணும்.

காக்கிச்சட்டையை கழற்றி வைத்துவிட்டு வா.. பார்த்துக்கலாம்”  என்று ஆவேசமாக பேசினார் கருணாஸ்.

இவரது பேச்சு காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.