கருந்தமலை மாயோன் காவியம்

ராக்கப்பன்

இது ஒரு மலைக்குடி மக்களின் சமவெளி நோக்கிய நீண்ட நெடிய வரலாற்று பயணத்தின் வலி பொதிந்த பக்கங்கள். முற்றும் முழுதான முதல் முதல் குடி பெயர்ந்த மக்களின் வாழ்வியல் முறை, சமவெளி சவால்கள், அதை எதிர்கொண்ட லாவகம், மானம் காத்த வீரம், வழிபாட்டுமுறைமை, விளைநில உருவாக்கம், உழைப்பு பற்றிய வரலாற்று தடயங்கள் பதிந்த காவியம். ஆடும் மாடும் இரு கண்கள் என கொண்ட ஒரு இனக்குழுவின் தடயம், மந்தைகளோடு பயணப்பட்டவர்களின் படிப்பினைகள்.

சிவகங்கை சீமையில், திருப்பத்தூர் வட்டாரத்தில் குடியமர்ந்த மக்களின் குடியியல் கதை. அறிவறிந்த உண்மைகளும் மனதறிந்த கற்பனைகளும் இனம் போற்றும் தத்துவங்களும் கலந்த கலவைக்கதை. இனிவரும் காலத்திற்கான படிப்பினைகள் கற்க தேடிப்பிடித்த பழம்கதைகள். வாருங்கள், பயணப்படலாம் 600 ஆண்டுகள் பின்னாளில் இருந்து. உங்களுக்கான பாடங்கள் உம்தலைமுறையினரிடம் இருந்து கற்க !

 

தொடக்கம்… 

 

கருப்பர் திருப்பூட்டு

அழகிய கருமேகங்கள் தவழும் மலை, ‘கருந்தமலை’ என இங்கு வாழும் கருப்பர் கூட்டம் அழைக்கும்.  மரங்களும், மனிதனும், மிருகமும் கூடி வாழும் அழகிய கூடு.

இன்றைய  சமதர்மம்  போதிக்கும் மனிதகுலம் கூட வெட்கித்தலைகுனியும் காலம் அது. சமதர்மம், வாழும் அனைத்து உயிர்களுக்கும் ஆனது என்று போற்றி வாழ்ந்த காலம் அது.

மனித நாகரீகத்தின் பிறப்பிடம் நதிக்கரைகள் என்போர், மனிதகுலத்தின் பிறப்பிடம் மலைமுகடுகள் என்பர்.  அறிவியல் அதுதான்.

அந்த அழகிய மலையில், அடர்ந்த காடுகள் ஆச்சர்யமானவை. இரண்டடி இடைவெளியில் உள்ள மனிதர்களும் கண்ணுக்கு தெரிவது கடினம். அனைவரும் கருப்பர் தான் அங்கு.

வண்ணங்களும், வர்ணங்களும் புகாத அடர் காடுகள். அங்கு வாழும் அனைத்து உயிர் இனங்களுக்கும் ஆன அனைத்து தேவைகளும் அங்கே அருகாமையில் இருந்தது.

தேவைகளுக்கான தேடுதல்கள் அங்கு மிக குறைவே. தேவைகளும் குறைவு தான்.

உணவும், உணவே மருந்துமாய் இருந்த வனத்தில், வாழ்ந்த இன குழுக்கள், வேற்றுமை பேணாமல் ஒற்றுமை போற்றிய காலம்.

அன்றைய தினம், அந்த அழகிய வனத்தில், முறுக்கேறிய வனப்பில் இருந்த கூட்டத்தின் இளயோன் கருப்பனுக்கும் அதே கூட்டத்தில் இருந்த துடிப்புமிக்க மங்கை அழகிக்கும் திருப்பூட்டு.

மாதிரி படம்

அங்கு வாழும் அனைத்து கூட்டமும் உறவாய் இருக்க அனைவரும் கூடி நிற்க, அழகிய ஆழ மரம் குடைவிருத்துநிற்க, கூட்டத்தின் பெரிய ஆம்பிளை பெரியகருப்பன் திருப்பூட்டு கையளிக்க, கருப்பன் அதைவாங்கி மங்கை அழகியின் கழுத்தில் அணிவித்தான்.

அழகிய மலர்களால் மாலைதொடுத்து, மங்கையின் தோழியர் எடுத்து வந்து கொடுக்க, அதையே மாலை மாற்றிக்கொண்டனர். இயற்கையின் சாட்சியாய், பெரியோரின் சாட்சியாய் இணைந்து வாழ்வதாய் மனதிலே உறுதியேற்று இல்லறம் துவக்கிய நாள் அது.

திருப்பூட்டு சிறப்பாய் நடந்தேற, தேனும் தினைமாவும் பரிமாற இனிய விருந்து நடைபெற்றது. வந்தவர் அனைவரும், அன்பையே பரிசாய் கொடுக்க, வஞ்சகமின்றி அதைவாங்கி நெஞ்சினில் சேமித்தனர் மணமக்கள்.

சேமிப்பது பழக்கப்படாத காலத்தில், பொறாமை, பொருள் மீதான ஆசை நிலைகொள்ளாத மனம்படைத்திருந்தனர். இந்த கூட்டம், மாடுகளையும், ஆடுகளையும் வனத்திலே ஆட்கொண்டு வளர்த்துவந்தனர்.

தேவைகளே அற்ற காலத்தில், மாடுகளையும் ஆடுகளையும் பராமரிக்க வேண்டிய கட்டாயம் என்ன?

இந்த இனத்தின், உயிர்கள் மீதான பாசம் அலாதியானது. தன் உயிர் போன்று மற்ற உயிரினங்களையும் போற்றி வாழ்ந்த குடி. வனக்காடுகளில், பெருத்துபொங்கிய உயிரினம் மாடும், ஆடும்.

இவைகளின், அதிகப்படியான உயிர்பெருக்கம், காடுகளை கடவுளாய் போற்றும் கூட்டம் இழக்கக்கூடும், மேலும் பெருகிய மாட்டுக்கூட்டம் உணவின்றி மரிக்க கூடும்.

ஆகவே, கடவுளான காடுகளை காக்கவும், சக உயிரினங்களான மாடுகளையும், ஆடுகளையும் காக்கவும், இந்த இனக்கூட்டம் அவற்றை பராமரிக்க தொடங்கியது. அந்த பந்தம், அவர்களை, இன்றளவும் பிரிக்க முடியாத சொந்தங்களாய் மாற்றும் என்று அறியாதவராய் வாழ்ந்த கூட்டம்.

கருப்பனும், அழகியும் மேலும் அழகாய் தெரிந்தனர் திருப்பூட்டிற்குப்பின். கருப்பன், வீரம் செழித்திருந்தான் என்பது பொய்யாகும், ஏனெனில், அக்கூட்டத்தில் அனைவருமே வீரர்தான்.

ஆனால், கருப்பன், வீரத்தோடு இயற்கை கற்றுக்கொடுத்த படிப்பினையாலும், மூத்தோர் கற்பித்த வாழ்வியலாலும் காடுகள் அறிந்த அறிவாலும், அக்கூட்டத்தின் இளையோர்களில் தலைசிறந்தவனாய் திகழ்ந்தான்.

அழகியோ, வீரத்தில் சற்றும் இளைத்தவராய் இல்லாமல், அன்பு பேணும் மங்கையாய், கருப்பனுக்கு ஏற்ற இணையாளாய், மனையாளாய் இருந்தால்.

அதே காடுகளில், உயிரினங்களை வேட்டையாடி உண்டுவாழ்ந்த இனக்குழுக்களும் இருந்தன. கூட்டங்கள் வேறுபட்டாலும், கருத்துக்கள் வேறுபடாமல், அனைவருமாய் காடுகளை பேணிநின்றனர்.

காடு, அவர்களின் உயிர்க்கூடு, கடவுள், சொர்கம், உணவு பெட்டகம், மருந்தாலயம். அதில், பத்திரமாய் வாழ்ந்து வந்தவராய் இருந்தனர்.

மற்றுமோர், இனக்குழு வனத்தோடு இயற்கையாய் வாழ்ந்து வந்தது. அவர்கள், மற்ற இனக்குழுக்களுடன் ஆன பரிமாற்றங்களே மிகக்குறைவானது.

இயற்கையின் ஓட்டத்தில், மழை பெய்து, குளிர் வந்து, வெயில் வறுத்து, பூ பூத்து, காயுற்று, கனி ஈண்ண்டு உருண்ட காலம் மனதறியவில்லை, கருப்பனுக்கும் அழகிக்கும். அதற்குள் தான் எத்தனை பிள்ளைகள். ஏழு ஆண் பிள்ளைகள், ஒரே பெண் பிள்ளை அத்தனையும் ஒருசேர வளர்ந்தது காடுகளையும், அழகியையும் தாயாய் கொண்டு.

வனம், வனப்போடு இருந்தது…