Random image

கருப்பர் – தொண்டைமான் சந்திப்பு : ஆழமான நட்பின் அடிகோல்

கருந்தமலை மாயோன் காவியம் – பாகம் 2

ராக்கப்பன்

கருப்பர் – தொண்டைமான் சந்திப்பு : ஆழமான நட்பின் அடிகோல்

 

அன்றைய விடியல், வனத்தை வதைக்கும் பொழுதாய் விடிந்தது. படபடக்கும் பறவைகள், அங்கு ஏதோ மாற்றுமனிதர்களின் வரவை அறிவித்தவண்ணம் இருந்தது. கூக்குரலிடும் பறவைகளின் ஓலி பாறைகளில் எதிரொலித்தவண்ணம் இருந்தது.

நிசப்தமான காடுகளுக்கறியாத ஓசையொலிகளும் புழுதிப்படலங்களுமாக வனம் வதைபட்டது. வனவிலங்குகளின் அலறிய ஓசையொலி அவர்களின் அச்சத்தை பிரிதிபலித்ததா அல்லது வருகின்ற மனிதர்களை எச்சரிக்கின்றதா என்று புரியாத புதிராய் இருந்தது. ஒலிகள் அருகாமையில் வர வர, ஆர்ப்பரிக்கும் பரியும், அதனோடு வேட்டையாடும் நாயுமாய், வனவிருந்தாடிகள் வந்திருப்பதை வனவாசிகளுக்கு அறிவிப்பதாயிருந்தது.

மாட்டுமந்தைகளுக்கு மத்தியில் மையமிட்டுருந்த கருப்பருக்கு அளப்பரிய சினம்மூண்டது. வனத்திலே வேட்டையாடி உணவருந்தும் மரபினர் இருந்தனர், அவர்கள், உணவுக்காய் அன்றி உயிரை துன்புறுத்துவதில்லை. ஆனால், வந்திருக்கும் விருந்தாளியோ, களிப்பிற்காக வேட்டையாடும் கூட்டம். அதை, வனசமதர்மம் பேணும் கருப்பரால் ஏற்க இயலவில்லை. ஜீவகாருண்யம் வாழ்ந்த உள்ளக்கூடம் நிறைந்த மனிதக்கூட்டம் அது.

கருப்பரின் சினம், வந்திருப்போரின் பலம் அறியவில்லை, யாரென்று வினவவில்லை, எண்ணிக்கை கணக்கெடுக்கவில்லை, ஆனால், மீறப்படும் வனதர்மத்தை முறியடிக்கவேண்டும் என துடிப்பாய் எழுந்தது.

கருப்பரின் ஓர் அழைப்போசையில், அவரது கூட்டம், ஒரு பெரும் முறியடிப்பு தாக்குதலுக்கு அவர்கள் அறியாமல் தயாரானார்கள். அது ஒரு முறியடுப்பு தாக்குதல் என்பதை அவர்கள் அறியாதவராய் நிலையெடுத்தனர்.

கருப்பரின் மரத்தினாலான “வளரி”, வந்த கூட்டத்தின் தலைவனாய் தெரிந்தவனின் கைகளை பதம்பார்க்க, கொண்டிருந்த வில் அம்பை இழந்தான். அந்த புரியாத ஆயுதத்தில் மதிமறந்தனர். அதற்குள், கருப்பர் கூட்டத்தின் எழுச்சிமிகு தாக்குதலை, சற்றும் எதிர்பாராத வனவிருந்தாடிகள் நிலைகுலைத்தனர்.

தலைவனாய் தெரிந்தவன் அப்படையின் ஆற்றல்மிகு செயலான் ரகுநாத தொண்டைமான் என்பதை கருப்பர் கூட்டம் அறிந்திருக்கவில்லை. இதையெல்லாம், பின்னால் இருந்து கவனித்த விஜயரகுநாத தொண்டைமான் மற்றும் அவனது மதியுரைஅறிஞர் அறிவுடை நம்பிகளும், காண்பதை நம்பியும் நம்பாமல், வியப்பின் விளிம்பில் இருந்துமீண்டு, “நிறுத்துக” என்று பெருமறிவிப்பை செய்தனர்.

விஜயரகுநாத தொண்டைமானின் குரலின் கம்பீரம், அவ்வொலி கேட்ட அனைவரையும் நிசப்தம் கோல செய்தது. காடுகளும், கருப்பர் கூட்டமும் தன்னை அறியாமல், கட்டளைக்கு அடிபணிந்தனர்.

வியப்பில் இருந்து மீண்ட விஜயரகுநாத தொண்டைமான், கருப்பரை பார்த்து, தாக்குதலுக்கான காரணத்தை வினவினார். கருப்பர், காடு தமக்கான வீடு என்பதையும், அங்குள்ள உயிரினங்கள் அனைத்தும் தமது சக உயிரினங்களென்றும், அவை கொல்லப்படுவதை அனுமதியோம் என்று பதிலுரைத்தார். உணுவுக்கு வேட்டையாட அனுமதிப்போம் அதுவும் மற்ற வனஉயிரை பாதிக்காமல்.

இதைக்கேட்ட விஜயரகுநாத தொண்டைமான், வியப்பில் விரைத்தார். உயிர்கள் மீது இத்தனை காதலா ? மனம் சிலாகித்தது.

அறிவுடை நம்பி இடைமறித்தார். வீரனே, இதை வேட்டை என்று எண்ணாதே. இது, ஓர் போர் பயிற்சி. எங்களது இனத்தை காப்பதற்காக, எம் வீரரை கொண்டு ஓர் போர் சூழலை ஏற்படுத்தி பயிற்சி செய்கிறோம். அதை, நீ பாழ்படுத்திவிட்டாய் என்று அறிவாயாக. மன்னிப்பு கேட்டு “உயிர்ப்பிச்சை” கேட்டுக்கொள் என்றார்.

கருப்பரோ, காடுகள் அறியா மொழியில் பேசுகுறீர்கள். பிட்சை எங்கள் அகராதியில் இல்லை, எங்களுக்கு மட்டுமல்ல, காடுகளை சார்ந்து வாழும் எவருக்குமில்லை.

விஜயரகுநாத தொண்டைமான், கருப்பரின் விடையில் உள்ள சாதுர்யத்தையும், வீரத்தையும், அவர்களின் வனப்பையும் கண்டு வியந்து மகிழ்ந்தார். கருப்பரிடம், நட்பை பாராட்டுவதாகவும், தங்களுக்கான போர்பயிற்சிக்கான சூழலை ஏற்படுத்தி உதவவேண்டினர்.

“உதவி” என்ற சொல், சூழலின் இறுக்கத்தை தளர்த்தி, கருப்பருக்கும் தொண்டைமானுக்கமான நெருக்கத்தை ஏற்படுத்தியது.

வந்தோரை இளைப்பாற்றி, அரும்சுவை விருந்தளித்தனர். இளைப்பாரிய தொண்டைமானிடம், மலையடிவாரத்தில், போர் பயிற்சிக்கான சூழல் உள்ளதாகவும் அங்கே அழைத்து செல்வதாகவும் கருப்பர் உரைத்தார்.

அதுவரை, கேட்க தயங்கிய வினாவினை, தொண்டைமான் வினவினார். கருப்பரே, வட்டவடிவிலான புதுவகை ஆயுதம் அது என்ன ? அதை, எங்களுக்கு பயிற்சிப்பீர்களா? மேலும், எங்களது பயிற்சியில், தாங்களும் தங்களுது கூட்டமும் மற்றைய வேட்டைச்
சமூகமும் பங்குபெறவேண்டும் என்றார்.

மேலும், அவர்களின் உணுவுத்தேவை குறித்தும் உதவிவேண்டினார்.

நட்புக்கு, நேசக்கரம் நீட்டினாரா கருப்பர் ?

நட்பு தொடரும்…..