கண்ணன் அறிமுகம்

கருந்தமலை மாயோன் காவியம் – பாகம் 3

ராக்கப்பன்

கண்ணன் அறிமுகம்

 

கருப்பர், விஜயரகுநாத தொண்டமானை  கருந்தமலை அடிவாரத்தை ஒட்டிய அழகிய சமவெளிக்கு அழைத்துச்சென்றார். அழகிய நீரோடை ஒருபுறமும், மறுபுறம் அடர்காடுகளும், மற்றுமொருபுறம் வானுயர் மலையும் காப்பரணாய் அமைந்த நிலஅமைப்பு அது. விஜயரகுநாத தொண்டமானும், அவரது இளையோன் ரகுநாத தொண்டமானும், அறிவுடை நம்பியும் தாங்கள் தேடியிருந்தாலும் இத்தனை அரிய இடத்தை தேர்வு செய்திருக்கமுடியாது என்றெண்ணினார். கருப்பருக்கு இயற்கையாய் அமைந்த போரியல் அறிவை கண்டு வியந்தனர்.

கருப்பர் மற்றும் அவரது  கூட்டத்தின் உதவியுடன் விஜயரகுநாதனின் வீரர்கள் தங்குவதற்கான குடில் அமைக்கப்பட்டது. காடுகளில் இருந்து அவர்களுக்கான உணவுத்தேவை பூர்த்திசெய்யப்பட்டது. காடுகள், மனிதகுலத்தின் தாய் என்பதை அறிவுடைநம்பி வீரர்கள் அனைவர்க்கும் விளங்கும்படி எடுத்துரைத்தார். காடுகள் காக்கப்படும்வரை மனிதகுலம் காக்கப்படும் என்பதை உதாரணங்கள் கொண்டு விளக்கினார். காடுகளை காக்கும் அந்த பெரும்பொறுப்பை கருப்பர் கூட்டத்தை போன்றோர் இன்றளவும் செய்துவருகின்றனர்.

போர்ப்பயிற்சி பட்டறையின் காவலரண் அமைக்கும் பணிகள் துவங்கியது. காவல் அரண்களில் நிலை நிறுத்த வீரர்கள் பற்றாக்குறை இருந்தது. கருப்பர் தனது கூட்டத்தின் வீரம் செறிந்த இளையோரை காவல் காக்கும் பணியில் பணித்தார். காடுகளில் அவர்கள் பயின்ற பட்டறிவு அந்த காவல்பணியில் தலைசிறந்தவர்களாய் பேரெடுக்க செய்தது.

விஜயரகுநாத தொண்டமான், கருப்பர் கூட்டத்தின் விழிப்புணர்வு மிக்க காவல்பணியால்  வியந்தார். இயற்கையே, சிறந்த பயிற்சியாளன் என்று தான் சிறுவயதில் பயின்றதை நினைவுகூர்ந்தார். கருப்பர் கூட்டம், சிறந்த கோட்டை காவலரண் வீரர்கள் கூட்டம் என்பதை விஜயரகுநாத தொண்டமானின் நினைவில் நங்கூரமிட்டு நிலைக்க செய்தது.

விஜயரகுநாத தொண்டமான், கருப்பரை காடுகளில் வாழுமுறைமைக்கான பயிற்சி வகுப்பினை நடத்த அழைத்தார். கருப்பரும், தான்  அதுவரை அறிந்த பட்டறிவை வீரர்களுடன் பகிர்ந்துகொண்டார். காடுகளின் ஒலி தரும் அறிகுறிகள், காடுகளில் வாழும் வழிமுறைகள், உறங்குமுறைகள், உணவு தேடும் முறையினை அனைத்தையும் கற்றுக்கொடுத்தார், வீரர்களுக்கு.

அதென்ன உறங்கும் முறை என மனம் சிலாகித்து செவிமடுத்த  அனைவர்க்கும். காடுகளில் உறங்கும் போது உடல் சமநிலையில் இருக்க, தலை உயர்ந்திருக்க கைகள் முட்டுக்கொடுக்க படுக்கவேண்டும். இது, நித்திரையிலும் ஆயத்தமாய் இருப்பதற்கும், சிறிய பூச்சிகளில் இருந்து காதுகளை காப்பதற்கும் என்பதை கருப்பர் விளக்க, வீரர் கூட்டம் வியந்து சிலுர்த்தது.

பின்னாளில், அறிவுடை நம்பி இதையே பெருமாளின் நித்திரைக்கோலம் என்றார். ஆம், எம்பெருமான் பெருமாளின் நித்திரை கோலம், வனத்தில் இருந்து புறப்பட்ட கதை ஆயிற்று.

விஜயரகுநாத தொண்டமான், வினவ முற்படுவதுற்கு முன்னதாக அறிவுடைநம்பி, படைக்கு மேலும் ஆள்சேர்க்க விரும்பி, மலையில் உள்ள வேட்டை சமூகத்தை அழைக்க சொன்னார். அதன் பொருட்டு, காடுகளில் இருந்த வில் அம்பு சமூகத்தினரை கருப்பர் அழைத்தார்.

அம்பு எய்துவதில் வல்லவர்களாய்  இருந்த அவர்களை பார்த்தமாத்திரத்தில் சிறந்த வீரர்களென்றும் அவர்கள் தங்கள் படையில் சேர்ந்தால் வெற்றி நிச்சயம் என்பதை விஜயரகுநாதரும், அறிவுடை நம்பியும் நம்பினார்கள். ஆனால், காடுகளில் வாழும் பற்றற்ற சமூகமாயிற்றே அவர்கள், படையில் சேர விரும்பாதவராய் இருந்தனர். அச்சமூகம், மனிதர்களை கொல்லும் போர் படையில் சேர விரும்பாதவராய் இருந்தனர்.

 

அறிவுடைநம்பி, விஜயரகுநாத தொண்டமானின் தொண்டைமண்டலத்தில் இருந்தான பயணத்தை கூறத்தொடங்கினர். தொண்டைமண்டலத்தில் இருந்து அவர்களின் குடிபெயர்தலையும், அவர்களுக்கும் பல்லவராயர்களுக்குமான பகை குறித்தும் உணர்ச்சித்ததும்ப கூறினார். ஒரு உரையில், இரு வால்களுக்கென்ன வேலை.

பல்லவராயர்கள், தொண்டைமண்டல சூறையாடலையும், அவர்தம் பசுக்கள் கவர்தலையும் வேதனை ததும்ப கூறினார். மீளா துயரின் துவக்கத்தையும், அழியா பகையின் எச்சத்தையும் வென்றெடுக்க வேண்டிய அவசியத்தை விளக்கினார். அவர்களின் மூதாதையரின் கடல் கடந்த வணிகத்தின் கணுவுகளையும், பொன்னையும், முத்தையும், பவளத்தையும் காண்பித்தனர்.

பொன்னமராவதியை மையமாகக்கொண்டு பெரும் வணிகத்தினை கடல் கடந்து செய்யவேண்டிய அவசியத்தையும், அவ்வணிக குடிகள் தங்களுடன் வரவிருப்பதையும், அது அக்காலத்தில் அப்பகுதியில் ஏற்படுத்த போகும் மாற்றத்தை கண்முன்னால் கொண்டு வந்தார், நாவினால். அதுவே தங்கள் குடிக்கான வாழ்வாதாரமாகமும், பல்லவராயர்களின் பகை ஒழிக்க வழியாகவும் அமையுமென்றும் வில் அம்பு கூட்டத்தாரை பார்த்து உதவி வேண்டினார்.

வீரம் செறிந்திருந்தாலும், அன்பொழுகும் இதயம் கொண்ட வில் அம்பினார் அறிவுடை நம்பியின் நயமான உரையாடலில் உறைந்தனர். அவர்களும், வீரத்திற்கான வாய்ப்பாய் கருதி, விஜயரகுநாதர் படையில் இணைந்தனர்.

சிறந்த வில் வீரர்களை கொண்ட படையணி வாய்த்ததில் அனைவரும் அகம் மகிழ்ந்தனர். தொண்டமான், காடுகளில் இருந்து ஒரு கூட்டத்தை நிரந்தரமாய் கீழிறக்கினார் என்பதை காலம் பதிவு செய்துகொண்டது.

வல்லம்பர் குடி, பட்டம், பரிவாரங்களுடன் சமவெளி சமுதாயத்தில் கலந்தது. பகை அறுக்கவந்த தொண்டமானின் தோளிற்கு திடம் சேர்க்கவந்த தீரர்கள் அவர்கள். அவர்களின் வீரத்திற்கு, காடுகள் அளிக்காத அங்கீகாரத்தை சமவெளி அளிக்கப்போவதை அறியாதவர்களாய் படையில் இணைத்தனர். அவர்களின் ரத்தம் ஈட்ட போகும் பவளத்தையும், பட்டத்தையும் அறியாமல் பரியேறினார்கள்.

தொண்டைமானும் அடுத்த உதவியை வேண்டினார். வட்ட வடிவிலான அந்த ஆயுத பயிற்சியையும் அதன் பெயரையும் வேண்டினார். கருப்பர், அதன் பெயர் “வளரி” என்றும் அதன் பயன்பாட்டையும் அதை கையாலும் முறைமையும் கற்பித்தார்.

மரத்திலான, அந்த ஆயுதத்தை உலோகத்திலானதாய் மாற்றவிரும்பிய விஜயரகுநாதர், தனது தம்பியை அதன் பொருட்டு பணித்தார். அவரும், அந்த ஆயுதத்துடன் ஊர் நோக்கி பயணித்தார், ஒரு புது வகை ஆயுத உற்பத்திக்காக. வருங்கால போரியல் முடிவுகளை தீர்மானிக்க போகும் பேராயுதம் அது என்பதை அறிந்தவராய் ரகுநாதர் பயணப்பட்டார்.

கானகம் அளித்த கொடைதான் வளரி, அது எதிரியின் தலைசீவி திரும்பும் ஆயுதம் என்பதை காலம் மறைத்தே வைத்திருந்தது, அதை கண்டறிந்த மாமேதை விஜயரகுநாத தொண்டமான்.

மாலை நேரங்கள் வடிவாய் வந்து சென்றது. அன்பொழுகும் நட்பும், அழகுகொஞ்சும் இயற்கையும், பறவைகளின் ஓசையும் சொர்கத்தை அனைவர் கண்களுக்கும், காதுகளுக்கும் படைத்திருந்தான் இறைவன். மாலைநேர கலந்துரையாடல்கள் மெல்ல அறிவுடை நம்பிகளின் போதனை  கூடங்கலாயின.

கருப்பர் கூட்டத்திற்கு கண்ணனை அறிமுகப்படுத்தியவரானார். கண் காணா  தேசத்தில் கண்ணன் ஆற்றிய கண் கவர் விளையாட்டுகளை மனம் ததும்ப விவரித்தார். மாடுமேய்க்கும் கண்ணன் கதை, உணர்ச்சியோடு கருப்பர் கூட்டத்திற்கு ஒன்றிப்போனது.

அறிவுடை நம்பியின் கதையாடல் கண்ணன் கருப்பர் கூட்டத்தில் ஒருவராய் தோன்ற செய்தார்.

அந்த காலத்தில் பிறந்த குழந்தைகள் கண்ணனாய், க்ரிஷ்ணனாய், மாயனாய், மாயோனாய், மாயவனாய், பெருமாளாய் பெயர் பெற்றனர். கருப்பர் கூட்டத்தில் மதுரா நாயகனின் பெயர்களும், யசோதை, மீனாள் போன்ற பெயர்களும் விதைக்க பெற்றன. அத்தனை புகழும் அறிவுடை நம்பிக்கே என கருப்பர் கூட்டம் வியந்தது.

கண்ணன் கதைகள் அறிவுடை நம்பியை கருப்பர் கூட்டத்தின் குருவாய் ஏற்க செய்தது. கருப்பர் கூட்டத்தை மெல்ல ஆயர் கூட்டமாய் அடையாளப்படுத்தினர் அறிவுடை நம்பிகள். அதுவரை மாடுகளாய் தெரிந்தவை கோமாதாக்களானது. கண்ணன் கதைகள், மாடுகளை முன்னிலை படுத்தி ஆடுகளை பின்னுக்கு தள்ளியது. அங்கே ஆயர்குடி பிறந்தது.

ஒரு அருமையான விடியல் பொழுதில், உலோகத்தாலான வளரியுடன் திரும்பினார் ரகுநாத தொண்டமான். உலோக வளரி, படு பயங்கரமான ஆயுதமாய் மாறிநின்றது. வீச்சின் வேகத்தில், எதிரியை வீழ்த்தி அது எய்தவர் கைதிரும்பியது வியப்பாய் மாறிநின்றது.

போர்க்களத்தின் போக்கை மாற்றும் பேராயுதம்  கண்டதில் விஜயரகுநாதர் அகம் மகிழ்ந்தார். வில் அம்பு படையுடன், வளரி வீச்சு படையணி, வெற்றியை கட்டியம் இட்டு பறைசாற்றிநின்றது.

கடுமையான பயிற்சி, அருமையான ஆயுதம், வலிமையான வில் அம்பு படையணி, அருமையான ஆயர்  கூட்ட நட்பு, இதை கொண்டாட நினைத்த விஜயரகுநாத தொண்டமான், ஒரு அருமையான மதிய விருந்துக்கு ஏற்பாடு செய்தார். காடுகளில் இருந்த வந்த உணவிற்கு மாற்றாக, அன்று சமவெளியில் இருந்தான தொண்டை மண்டல உணவு.

இயற்கையும், செயற்கையுமாய் கலந்த உணவு. உணவிலே முதல்முறையாக உப்பை தனியாக பயன்படுத்தியதை கண்டு ஆயர்  கூட்டம் வியந்தது.

ஆனால், கருப்பர் அதை பயன்படுத்துவது விஷம் என்றார். அது வன வாழ்வியலின்  எதிர் மறை வாழ்வியல் முறை என்றார்.

உப்பு, சேமிக்கும் பழக்கத்திற்கான தொடக்கப்புள்ளி, அது பேராசைக்கான முதல் படி என்று கருப்பர் கூறியதை விஜயரகுநாதரையும், அறிவுடை நம்பியையும் தவிர மற்றவர் புரியாதவராய் நின்றனர்.

உப்பே உலகின் முதல் வணிகப்பொருளாய், காடுகளில் வாழ்ந்த மனிதர்களுக்கு பரிமாறப்பெற்றது. அது உப்பிட்டவரை உள்ளளவும் நினைக்க தோன்றியது. ஒரு சகாப்தமாய், உப்பு வணிகம் மக்களை புரட்டிப்போடும் என்பதை யாரும் நினைக்கவில்லை என்றாலும், கருப்பர் எச்சரிப்பை, அறிவுடை நம்பி, வியந்து பார்த்தார். எத்தனை பாரதூரமான பார்வை.

உப்பு உணவை கெடாமல் பார்த்துக்கொள்ளும், ஆனால் மனதை நிச்சயமாய் கெடுத்துவிடும்.  அதுவரை, உண்ண வேண்டியதை மட்டுமே தேடினர், மிஞ்சாமல் பார்த்துக் கொண்டனர், மிஞ்சியதை பகிர்ந்து உண்டனர்.

மிஞ்சியதை சேமிக்கமுடியும் என்பதை உப்பு கற்றுக்கொடுத்தது.

அது வஞ்சகத்தை விதைத்து, ஈகையை மெல்ல முறித்து போடும் என்பதை அன்றே கருப்பர் உணர்ந்தார். உப்பு கல் பின்வரும் காலத்தில் வைர கல்லையும், பவளத்தையும், முத்தையும் தேடி ஒரு குடியை கடல் தாண்டி ஓட செய்தது.

உப்பு இயற்கையின் எதிர்வினை என்பதை காலம் கற்பிக்கும். அதுவரை அது மனித குல உணவை கோலோச்சும்.