கருந்தமலை மாயோன் காவியம்பாகம் 4

ராக்கப்பன்

அறிவுடை நம்பியின் – மூதாதையர் கூட்டத்தின் உருவாக்கம் – கண்ணப்பர் கதை

 

விருந்து களைப்பிலும், கருப்பரின் ஆழமான உப்பு பற்றிய கருத்து, கருப்பர் மீதான மதிப்பை அனைவர் எண்ணங்களிலும் உயர்த்தியது. விருந்து இனிதே முடிந்து, அனைவரும் விடைபெற்றனர்.

கருந்தமலை பயிற்சி பட்டறை, அதுவரை வெற்றியை ஈட்டியிருந்தாலும், விஜயரகுநாத தொண்டமானின் மனதில் இனம் புரியாத கவலை ரேகைகள் பரவத் தொடங்கியது. மற்றவர் முகக்குறி அறிந்து மனமறியும் ஆற்றல் பெற்ற அறிவுடை நம்பி, விஜயரகுநாத தொண்டமானின் கவலை குறித்து சிந்திக்க தொடங்கினார். அதற்குள், ரகுநாத தொண்டமான், கவலைக்கான காரணத்தை நேரடியாகவே கேட்டுவிட்டார். கேள்விக்கான பதிலை அறிவுடை நம்பி கூறத்தொடங்கினார்.

கோலோச்ச நிலம், படை, குடி இவை மூன்றும் தேவை. ஓரளவு தகுதியான படை உருவாக்கப்பட்டு விட்டது. நிலத்திற்கான போரட்டத்தை தொடங்கலாம். ஆனால், தனக்கான நம்பத்தகுந்த குடி இல்லாமல் இந்த போராட்டத்தை முன்னெடுக்க முடியாது என்ற யதார்த்த உண்மையை விளக்கினார்.

காலத்தின் மர்ம முடிச்சுகளை மனிதன் தன் அறிவு கொண்டு வெல்லத்துடிக்க தொடங்கி மிக நீண்ட காலமாயிற்று.

அரசியலில், அறிவு சூழ்ச்சியாகவும், சூதாகவும், ராஜதந்திரமாகவும் மேலும் பரிணமிக்க தொடங்கிய காலம். அந்த வனாந்திர காடுகளும், இயற்கை கொஞ்சும் மிருகங்களும், பறவைகளும், ஏன், அங்கு வாழ்ந்த மனிதர்களும் அறியாத சூழ்ச்சி அங்கு பிரசவிக்க காலம் நிர்பந்திக்க தொடங்கியது.

அந்த இரவின் காரிருள், அங்கிருந்த மூவரின் மனதின் இருள் கண்டு அஞ்சியது. மனிதனின் மனதை மட்டும் காணமுடிந்தால் இயற்கையும், கொடிய மிருகங்களும், ஏன், பேயும் பிசாசும் கூட கண்டு அஞ்சத்தான் செய்யும். காரிருள் சுயநல நெஞ்சை, புன்னகை முகம்கொண்டு மூடி உலாவும் மனிதர்களை ஊர், காடுகளுக்கு பரிசளித்தது. அந்த காடுகளின் குடியினங்களின் குடிகெடுக்கும் சதி உருவெடுக்க தொடங்கியது. அது காலத்தின் கட்டாயம், விதியின் நிர்பந்தம், பகையின் பரிபாலனம், வாழ்வின் அடிநாதம், சுயநலத்தின் சுயரூபம்.

அறிவுடை நம்பிகளே பேச தொடங்கினார். கருப்பரின் ஆயர் குடியையும் அதனோடு காடுகளில் தங்கியிருக்கும் மற்றோர் வேடர் குடியையும் தங்களோடு வர அழைக்க வேண்டும் என்றார். விஜயரகுநாத தொண்டமான், மற்றோர் வேடர் குடியா ? அது யார், எவர் என்று வினவினார் ?

அறிவுடை நம்பிகளும், தனது காடுகளின் உடனான  தனிப்பயணத்தில் ஒரு குடியை கண்டதாகவும், இயற்கையோடு ஒண்டி வாழும் அவர்கள் காடுகள் மீதும் அங்கு வாழும் மற்ற உயிரினங்கள் மீதும் கொண்ட அலாதியான பாசம் பற்றி எடுத்துரைத்தார். சுயநலமற்ற மனிதர்கள் என்றார்.

தொண்டமானோ, காடுகள் கெடாமல் இருக்கின்றதென்றால் இங்குள்ளவர்கள் அனைவரும் சுயநலமற்றவர்கள் என்பதை யாரும் அறிவார்கள். அவர்களின் தனி குணம் பற்றி கூறுங்கள் என்றார்.

அறிவுடை நம்பியோ, சிரித்த படி விவரிக்கத்தொடங்கினார். வேடர் குடி, உயிர் கொல்லாமல் வேட்டையாட முடியுமா ? அதெப்படி முடியும் ? என்றார் ரகுநாத தொண்டமான்.

மிருகமும் தன் உணவை பகையாக கருதி, மூர்க்கமாக தாக்கி கொன்று தன் பசி தீர்க்கும். ஆனால், தான் குறிப்பிடும் வேடர்குடி, தன்னிரையை கூட கொன்று பிடிக்காமல் பொறி வைத்து பிடிக்கும் அன்பிற் சிறந்த குடி. சூதறியாத, அன்பொழுகும், உணவுக்கு மட்டுமே உழைக்கும் உயர்ந்த பண்பாளர் குடி. தங்கள் முன்னோரை இயற்கையோடு சேர்ந்து வழிபடும் குடி. சிறந்த உழைப்பாளர்கள். அவர்களை தங்களோடு அழைத்துச்செல்வது சிறந்ததாக இருக்கும் என்றார்.

விஜயரகுநாத தொண்டமான், விடிந்ததும் அவர்களை காணவேண்டும் என்றார். அன்றைய இரவு மெல்ல கறையத்தொடங்கியபொழுதில், அந்த ஆலோசனை கூட்டமும் கலைந்தது, மறுநாளைய வேலைத்திட்டத்துடன்.

விடிந்த பொழுதின் அடையாளமாய் சூரியகீற்றுகள் அந்த அடர்காடுகளின் இலைகளை ஊடுருவி வெளிச்ச வேல்களை பாய்ச்சிநின்றது. கானகமும் தூங்கியெழுந்ததோ ? பறவைகள் இரைதேடும் பணியோடு பன்னிசை பாட்டு பாடுவது யாருக்காக ? நீரோடைகள் கரைகடக்காமல் நிலம் தேடி ஓடுவது நல் ஒழுக்கத்தாலா ?

ஆயிரமாயிராம் ஆச்சர்ய வினாக்களோடு, கடந்த இரவுக்கான விடையோடு அறிவுடை நம்பி, வேடர்குடி தலைவன் இருளப்பன் தலைமையில் ஆன கூட்டத்தோடு வந்தார். இருளப்பர் தன்னோடு காணக்கிடைக்காத வண்ண கிளிகள் இரண்டோடு வந்து, விஜயரகுநாத தொண்டமானுக்கு பரிசளித்தார். அந்த பரிசே, கடந்த இரவின் அறிவுடை நம்பிகளின் விளக்கவுரைக்கு கட்டியம் இட்ட சாட்சியமானது. வியப்பும், விந்தையுமாக பரிசை பெற்ற விஜயரகுநாத தொண்டமான் முத்துமாலையை பரிசளித்தார். முத்துமாலையை யாதென்று அறியாமல் எந்த ஒருபெரிய ஆச்சர்யம் இல்லாமல் பெற்றுக்கொண்டதை கண்டு தொண்டமான் மேலும் வியந்தார். பற்றற்றவனுக்கு முத்துமாலையும், பவளமாலையும் என்ன இன்பத்தை தரும். வண்ண பூமாலையாவது நறுமணம் தந்து அகமகிழ செய்திருக்கும்.

அறிவுடை நம்பி தனது அறிவை நாகொண்டு பேசினார். கருப்பர்க் கூட்டத்திற்கு கண்ணன் கதை இயம்பி ஆயர் கூட்டமாய் மாற்றியவர், சிவன் கதையை கூறத்தொடங்கினார். வேடவர் ஒருவர், சிவலிங்கத்துக்கு படையிலிட்ட வரலாறும், அதன் பிறகு கண்கொடுத்து,  கண்ணப்பர் ஆன கதையும் கேட்ட இருளப்பர், மனமெல்லாம்  கண்ணப்பர் நிறைந்தார். அவர் கூட்டம் மெய்சிழுத்தது. தமது வரலாறுக்கான தடயங்கள் தெரியத் தொடங்கியதாய் உணர்ந்தனர்.   

ஆசையில்லா மனமும், பெருமைக்கும், புகழுக்கும் ஏங்கும் என்பதை பெரிதும் நம்பும் அறிவுடை நம்பி வார்த்தை வலைவிரித்தார். இறை தொண்டிற்காய் பிறந்த குடி, காடுகளில் அதை தேட கூடாதென்றும், பரந்த நிலப்பரப்பில் சிவத்தொண்டாற்ற தங்களோடு ஊருக்கு வரவேண்டும் என்றார்கள்.

பிறவிப்பயன் அறியாத பேதையராய் தாம் இருப்பதாய் என்ன தோன்றியது அவர்களுக்கு. அன்பொழுகும் அந்த கூட்டத்தில் இறைஅருள் இயற்கையாய் பொங்கியது. அந்த கூட்டத்தில் கண்ணப்பர்கள் பிறந்தார்கள், இறைத்தொண்டு வேண்டி மனம் ஏங்கியது. ஆனால், இருளப்பர் மனம் ஏனோ, சட்டென இயல்பு நிலை திரும்பி, கானகம் தமது உயிராய் தோன்றியது. தமது கடவுளான மூதாதயர்கள் குடியிருக்கும் காடுகளை துறந்து வர மனம் ஒப்பவில்லை. அன்றைய காலைப்பொழுது தொண்டமான் எதிர்பார்த்த விடைகிடைக்காமல் கூட்டம் முடிந்தது.

மறுநாள் மாலை, கூடுவதாக சம்மதித்தனர். நம்பிகளின் இறை சொற்பொழிவுடன் சந்திப்பு தொடங்கும் என்றதுடன், பெண்களையும் அழைத்துவருமாறு தொண்டமான் கூறினார்.

மதியஉணவுடன், கருப்பர் உடனான சந்திப்பு தொடங்கியது. கருப்பர் தொண்டமண்டல உணவை தவிர்த்து, காடுகள் கொடையளித்த இயற்கை உணவை உட்கொண்டார். சுருக்கமாய், உப்பை தவிர்த்தார். உணவின் போதே, நம்பிகள் பேச்சை தொடங்கினார். காடுகளில் இருந்தான தமது பயண தொடக்கத்தில், கருப்பர் கூட்டமும் தங்களோடு வரவேண்டும் என்றார். மறுப்புரை, வீராத்தாளிடம் இருந்து வந்தது.

வீராத்தாள், கருப்பருடன் உடன் பிறந்தவள். பூப்பு எய்யாத இளம் பூவையால், அவள் பெயரும் பொருள் பொதிந்தது. அந்த சிறுவயதிலும், எவருக்கும் அஞ்சாத துணிவும், வீரமும் அவளை கருப்பருடன் எப்போதும் ஒன்றுபடுத்தியது. பேச்சிலே துடுக்கிருக்கும், துணிவும் கலந்திருக்கும், அதனோடு மதிநிறைந்திருக்கும்.

காடுகள் தமது கூடாரம், இயற்கை காப்பது தமது இறைபணி, அதை விடுத்து வருவது தனது உயிர் பிரிந்தவுடன் தான் என்று சத்தியம் செய்தால். கருப்பரும் மற்றவரும் வாயடைத்து நிற்க, கருப்பர் அதை இறைவனின் கட்டளையாகவே எண்ணினார். அதற்கு மேல் பேசாமல், அதையே ஆமோதிப்பதாக சொல்லாமல்  சொல்லி புறப்பட்டார்.

விஜயரகுநாதர், அன்றைய பொழுதை நொந்தார். தமது முயற்சியின் தோல்வி கண்டு மனம் வருந்தினார். நம்பிக்கையையும், அதனைவிட நாவினையும் நம்பும் அறிவுடை நம்பிகள், விடியும் பொழுது நம்பிக்கை விதைக்கும் என்று ஆழமாக நம்பினார். கடல் கடக்கும் சிறு குருவியும், வலைவிரிக்கும் வளந்தியும், இறைபொருக்கும் பறவையும் வாழ்வது எதனால், நம்பிக்கை ஒன்றே, அதனால். துணிவும், நம்பிக்கையுமே துணை. அதனோடு அடுத்தநாள் மாலைப்பொழுதிற்கு காத்திருந்தார்.

பொழுது விடிந்தது, மெல்ல அந்தியும் சாய்ந்தது, இருளப்பர் தலைமையில் மூதாதையர் வழிபாட்டு கூட்டம், பெண்டுகளோடு வந்தது. கடந்த நாளின் கண்ணப்பர் புராணம், பெண்களுக்கும் பகிர்ந்து, இறை பசியோடு அறிவுடை நம்பிகளின் வார்த்தைகளுக்கு செவி கொடுத்து மூதாதையர் கூட்டம் காத்திருந்தது. சிவன் புகழ் கூறத்தொடங்கியவர், மெல்ல சிவனின் மைந்தனான அழகிய முருகனின் கதைக்கு வந்தார்.

முருகனுக்கும் வள்ளிக்கான காதல் கதைக்கு வந்தார். வள்ளி மூதாதையர் கூட்டத்தின் மகளாக அனைவரும் உணர்ந்தனர். மனம் முடிக்காத அனைத்து பெண்டிரும் தாம் வள்ளியாகவே உணர்ந்தனர். ஆடவர் அனைவரும், முருகனுக்கு பெண் கொடுத்த பாக்கியம் பெற்றவர்களாய் உணர்ந்தனர்.

பக்தி பரவசம் பொங்கியது. நேற்று பிறந்த கண்ணபர்களுடன், இன்று பிறந்த வள்ளிகளுமாய் மூதாதையர் கூட்டம் இறையோடு ஒன்றியது. மகுடிக்கு மயங்கிய பாம்பாய், கூட்டம் அறிவுடை நம்பியின் வார்த்தைக்கு கட்டுப்பட்டது.

இருளின் ஆட்சி காட்டிலே மெல்ல  தொடங்கியது, மூதாதையர் கூட்டம் மெல்ல கலைந்தது. அவர்களின் மனங்கள் மெல்ல இறைபணி தேடி, சிவன் அருள் வேண்டி, முருகன் தரிசனம் வேண்டி நெடுந்தூரம் சென்றது. அவர்கள் உடல்கள் மட்டுமே கலைந்தது, மனங்கள் யாவும் இறையோடு ஒன்றி தழைத்தது. விடியும் பொழுது விசித்திரத்தை ஒழித்திருக்கும் என்று எவரும் எண்ணாமல் கலைந்தனர்.

பொழுது விடிந்தது. காடு பிரளயமானது. மூதாதையர் கூட்டம் பதைபதைத்தது. கூட்டம் அறிவுடை நம்பியை தேடி ஓடிவந்தது. மூதாதையர் கூட்டத்தின் கடவுள் காணாமல் போனார். களவு அறியாத காலத்தில், கடவுள் காணாமல் போனார் ! களவு போகவில்லை!

ஒருவேளை, மூதாதையர் கடவுள் / முன்னோர்கள் , சிவனையும் / முருகனையும் தேடி காடு இறங்கிச்சென்றனரோ?

காலம், சில உண்மைகளை புதைத்தே வைக்கின்றன ?

மூதாதையர் கூட்டம் தம் கடவுளை தேடி புறப்பட்டனர் !