கருந்தமலை மாயோன் காவியம்பாகம் 8

ராக்கப்பன்

புதூர் குடியமர்தல்

 

வல்லவராயர்களை முற்றிலுமாக அழித்த தொண்டமான் தம் பகையழிந்த திருப்தி ஒருபுறம் இருந்தாலும் சங்கிலி கருப்பரை இழந்த துயரம் மேலும் வாட்டியது. தொண்டமானிற்காக, நட்பிற்க்காக, ஆயர்கூட்டம் அளித்த களப்பலி அளப்பரியது. தொன்றுதொட்டு வந்த பகையை மிக சமீபத்திய நட்பு அழித்தொழித்தது.

வல்லவராயர்களின் அழிந்த கோட்டையை விடுத்து அழகிய ஒரு புது நகரத்தை நிர்மாணிக்க தீர்மானித்தார்கள். அந்த புது நகரம் அவர்கள் ஆண்ட நாட்டின் மையமாக இருக்குமாறு ஒரு இடத்தை தேர்ந்தெடுத்து அதை திருமைய நகரமாக அறிவித்தார்கள். அவர்கள் ஆளுகையின் தென் எல்லையில் தியாகத்தின், வீரத்தின், நட்பின் அடையாளமாக, புற காவல் கோட்டையில் கோட்டை கருப்பருக்கு சிலையெடுத்தார்கள். அவரின் எதிர் சன்னதியாக சங்கிலி கருப்பருக்கு சன்னதி அமைத்தார்கள்.

தொண்டமானின் கோட்டை நகரத்தில் குடியிருந்த வாணிப பெரியோர்களும், முத்தரையர்களும், ஆயர்களும் தங்கள் உயிர் காத்த குல தெய்வங்களாக கோட்டை கருப்பரையும் சங்கிலி கருப்பரையும்  ஏற்று வழிபட தொடங்கினார்கள்.

ஆதியும் ராக்கப்பனும் நெருங்கிய நட்பு பாராட்டினார்கள். தாங்கள் எதிர்பார்க்காமல் தங்கள் குடி காக்கும் பெரும்பொறுப்பு தங்களுக்கு வந்து சேர்ந்தது. ஆதியின் தங்கை அழகியை ராக்கப்பன் மனம் முடித்தார்.

அறிவுடை நம்பியும் தொண்டமானும் வற்புறுத்தியும் அரசு பதவிகளை ஏற்க ராக்கப்பன் மறுத்தார். தமது தமக்கை வீரத்தாள் அளித்த அறிவுரையின் படி படைகளிலோ அரச பதவிகளிலோ இடம் பெற போவதில்லை என்பதை உறுதியாக தெரிவித்தார். வீரத்தாளை பெண்தெய்வமாக நினைத்து ராக்கப்பன் தன்னோடு வைத்து வழிபட்டான்.

தொண்டமானின் தொடர் வற்புறுத்தலில் இருந்து தப்புவதற்காக, ராக்கப்பன் தங்கள் குல தெய்வங்களான கோட்டை கருப்பர் மற்றும் சங்கிலி கருப்பர் குடியிருக்கும் புது ஊருக்கு செல்ல விரும்புவதாக தெரிவித்தார். கருப்பர் கோவிலை சுற்றிஅமைந்த அந்த குடியமர்தலுக்கு அன்று புது ஊர் என்றுதான் பெயர் இட்டார்கள்.

தொண்டமானும் தாம் என்ன சொன்னாலும் ராக்கப்பன் கேட்க போவதில்லை என்பதை உணர்ந்து, ராக்கப்பன் புது ஊருக்கு செல்வதற்கான ஏற்பாடுகளை  செய்வதற்கு அறிவுடை நம்பி அவர்களை பணித்தார்.

ராக்கப்பன் தமது சகதோரர்களின் பிள்ளைகளுடன் புதூர் நோக்கி புறப்பட்டார். ராக்கப்பனுக்கு, புதூர் பிரதேசத்தில் அவர் குடியிருக்க இடமும் அவர்களின் கால்நடைகளுக்கான மேய்ச்சல் நிலத்திற்கு புதூர் ஒட்டிய பல கிராமங்களையும் தந்தார், தொண்டமான்.

ஆயர்குடியின் மூத்தோன் ராக்கப்பனின் முதல் குடி பெயர்தல் தொடங்கியது. அந்த குடிபெயர்தல், இறைவனை தேடியதாக அமைந்தது. தங்கள் குல முன்னோர்கள் வழிகாட்டுதலின் படி இயற்கையோடு வாழ புதூர் வந்து சேர்ந்தார்கள்.

ஆதி மற்றும் அவரது சகோதரர்கள் போர்க்காலத்தில் ஆற்றிய பணியை பாராட்டி தொண்டமான் அவர்களுக்கு ‘கோன்’ பட்டம் அளித்தார். அன்று முதல் ஆதியகோன் வகையறாக்களாக அழைக்கப்பட்டார்கள். திருமைய நகரத்தை ஒட்டிய பகுதியில் பல கிராமங்களை நிர்வகிக்கும் பொறுப்பை ஆதியகோன் பெற்றார்.

புதூர் வந்த ராக்கப்பன், கோட்டைக்கருப்பர் கோவிலில் நட்பின் இலக்கணத்திற்காக தொண்டமானிற்கு சிலை அமைத்தார். நீரோடு என்றும் வாழ்ந்த ஆயர்கூட்டம், நீர் தேக்கினால் மட்டுமே தனது கால்நடைகளுக்கு வருடம் முழுவதும் நீர் அளிக்க முடியும் என்ற சூழலில் ஒரு கண்மாய் வெட்ட  தீர்மானித்தார். ராக்கப்பனும் அவருடைய குடும்பத்தாருமாக சேர்ந்து ஒரு கண்மாய் வெட்டினார்கள். புதூர் தனக்கான முதல் கண்மாயை கண்டது.

ராக்கப்பன் வகையறாக்கள் தங்கள் திருமணங்களில் புதூர் கண்மாயின் பாத்தியத்தை இன்றளவும் கொண்டாடுகிறார்கள்.

ஆடு மாடுகளுக்கு உணவுக்கான மேய்ச்சல் நிலங்களை தயார் செய்த ராக்கப்பன், தனக்கான உணவு தேவையை எண்ணி வருந்தினார். ஒரு ஆயர்குடி, விவசாய குடியாக மாறத்தொடங்கிய கால கட்டம். புதூர் கண்மாயை ஒட்டிய பகுதியில் தமக்கான உணவுகளுக்காக விவசாயம் செய்யத்தொடங்கினார்கள். அதுவரையில், பால் வாணிப பொருளாகவில்லை. ஆடுகள் தமக்கான உணவு தேவைக்கும் மற்றைய தேவைக்குமாக வாணிப பொருளாகியது.

இறைவழிபாடு, ஆடு மாடு மேய்ச்சல் என்று சென்ற வாழ்க்கையில், அறிவுடை நம்பிகளால் குறிப்படப்பட்ட  தமது குடி தெய்வமான  கண்ணனின் திருவருள் பெற எண்ணினார்கள். அறிவுடை நம்பியின் அறிவுரையால், புதூர் அடுத்துள்ள திருக்கோஷ்டியூர் நாராயணன் திருக்கோவிலை கண்டார்கள். நாராயணின் திருசேவையில் தம்மைமறந்தார்கள். திருக்கோவிலிற்கு பால் அளித்த குடிகளில் ராக்கப்பன் குடியும் சேர்ந்தது.

மாடுகள் வளர்ப்பு தங்கள் உயிர் துடிப்பாகவும், விவசாயம் தங்கள் தேவைக்காகவுமாக இருந்தது. மாடு பிடி விளையாட்டுகளில் கருப்பர் வகையறாக்கள் அனைவருமே தீரத்துடன் இருந்தார்கள். அக்கால கட்டத்தில் நடந்த பெரும்பாலான மாடு பிடி விளையாட்டுகளில் அவர்கள் வெற்றி பெற்று பட்டு துண்டுகள் பரிசு பெற்றனர். பெற்ற பரிசுகளை, பானைகளில் சேமித்துவைத்தனர். பானைகளே, அன்றைய பெட்டகங்கள்.

அந்த கால கட்டத்தில், மதுரையில் இருந்த இஸ்லாமிய அரசு சரிந்து நாயக்கர்களின் ஆட்சிமாற்றம் வந்தது. நாயக்கர்கள் மெல்ல மெல்ல இஸ்லாமிய வீரர்களை மதுரையை விட்டு வெளியேற்றினார்கள். அப்படி வெளியேறிய இஸ்லாமியர்கள், வாழ்வாதாரம் தேடி மதுரையை விட்டு புறப்பட்டார்கள். அதில் ஒரு குடியினர், புதூர் வந்து சேர்ந்தார்கள்.

மெல்ல புதூர் பல சமுதாயங்கள் சேர்ந்து வாழும் நகரமாகியது. நகரம், அடுத்த சவாலை கருப்பர் கூட்டத்திற்காக தயார்படுத்தியது.

கருப்பர் கூட்டம் கதை தொடரும்…